மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 பிப் 2019

ஒரே நாளில் 3 மாநிலங்கள்: தெற்கைக் குறிவைக்கும் மோடி

ஒரே நாளில் 3 மாநிலங்கள்: தெற்கைக் குறிவைக்கும் மோடி

மக்களவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்கிற சூழலில் பிரதமர் மோடி மீண்டும் தனது ஆட்சியைக் கொண்டுவர புயல் வேக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று பிப்ரவரி 10 ஒரே நாளில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என்று மூன்று மாநிலங்களில் அரசுத் திட்ட விழாக்கள், பாஜக விழாக்கள் என்று கலந்துகொண்டிருக்கிறார் மோடி.

தென்னிந்திய பிரச்சாரப் பயணத்தின் முதல் கட்டமாக நேற்று ஆந்திர மாநிலம் குண்டூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார் மோடி. ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு மோடியின் முதல் ஆந்திரப் பயணம் இது.

குண்டூர் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, ‘ஃபாதர் ஆஃப் லோகேஷ்’ என குறிப்பிட்டு கடுமையான தனிநபர் தாக்குதல் நடத்தினார் மோடி. லோகேஷ் என்பவர் சந்திரபாபு நாயுடுவின் மகன்.

“சந்திரபாபு நாயுடு எனக்கு சீனியர் என்று சொல்கிறார். ஆனால் முதுகில் குத்துவதில்தானே எல்லாருக்கும் சீனியர். தன் மாமனாரின் முதுகில் குத்திதானே அவர் ஆட்சிக்கே வந்தார்”என்று தாக்கினார் மோடி. பிரதமர் வருகையை எதிர்த்து ஆந்திராவிலும் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.

மோடியின் மகன் பேச்சுக்கு சந்திரபாபு நாயுடு மோடியின் மனைவியைக் குறிப்பிட்டு பதில் அளித்துள்ளார். நேற்றே அவர் விஜயவாடாவில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘மோடி நீங்கள் உங்கள் மனைவியைப் பிரிந்து வாழ்கிறீர்கள். குடும்ப அமைப்பின் மீது உங்களுக்கு ஏதும் மரியாதை இருக்கிறதா? நான் குடும்ப அமைப்பை மதிக்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி குடும்ப ரீதியாகப் பேசியதால் நானும் அவ்வாறே பேச வேண்டியதாகிறது” என்று பேசினார் சந்திரபாபு நாயுடு.

ஆந்திர கூட்டத்தை முடித்துக் கொண்டு திருப்பூருக்கு வந்த மோடி பல அரசுத் திட்டங்களைத் துவக்கி வைத்தார். நாட்டின் இரண்டு ராணுவத் தளவாட ஆலைகளில் ஒன்றை தமிழகத்துக்குக் கொடுத்திருப்பதாகக் கூறிய மோடி, காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, ‘ரிகவுண்ட் மினிஸ்டர்’ என்று குறிப்பிட்டுத் தாக்கினார்.

இதற்கு பதில் சொல்லிய ப.சிதம்பரம், “இன்றைய ஆட்சியாளர்களைக் கருத்தில் கொண்டு அன்றே திருவள்ளுவர் சொன்னாரோ? எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

பணமதிப்பு நீக்கம் செய்த திரு மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 50,000 குறு, சிறு தொழில்கள் மூடப்பட்டன என்றும் 5 இலட்சம் பேர் வேலையிழந்தனர் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தது நினைவிருக்கிறதா?

பணமதிப்பு நீக்கம், கோமாளித்தனமான ஜிஎஸ்டி சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த திரு மோடி அவர்களே, உங்கள் மடியில் இன்னும் உள்ள ஆயுதங்கள் என்னவோ? ஜிஎஸ்டி அடிப்படையில் நல்ல கொள்கை. அதைக் கோமாளித்தனமாக அமுல்படுத்தி அந்தச் சட்டத்தைப் பொல்லாத சட்டமாக மாற்றியது யார்? ஒழுங்காக வரி கட்டி நடந்து கொண்டிருந்த, தொழில்களை நசுக்கியது யார்?” என்று தனது ட்விட்டரில் மோடிக்கு கேள்விகளை தொடுத்தார் ப.சி.

ஆந்திராவைப் போலவே தமிழகத்திலும் திருப்பூரில் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டங்கள் நடந்தன.

தனது ஒரு நாள் தென்னிந்தியப் பயணத்தின் கடைசி நிகழ்வாக நேற்று மாலை கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர், பாஜக கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

“இம்மாநிலத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பவரைக் காட்டுவதற்கு ஹோட்டல்களில் போராடிக் கொண்டிருக்கின்றனர். முதல்வர் குமாரசாமியோ யார் குத்தினாலும் தாங்கிக் கொள்ளும் பஞ்ச்சிங் பேக் ஆக இருக்கிறார். தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே தனது முழு ஆற்றலையும் அவர் செலவழித்துக் கொண்டிருக்கிறார். கர்நாடகாவில் இவர்கள் அமைத்திருக்கும் இந்த கூட்டணி போலத்தான் நாட்டிலும் அமைக்க விரும்புகிறார்கள். அப்படி ஒரு கூட்டணி தேவையா நாட்டுக்கு?” என்று கேட்டார் மோடி.

கர்நாடகாவில் பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில் கர்நாடக முதல்வருக்கு அழைப்பில்லை. இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய குமாரசாமி,

“ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு, நிலத்துடன் 50 சதவிகிதம் நிதி வழங்குகிறது. ஆனால் ஹுப்ளியில் பிரதமர் தொடங்கி வைக்கும் விழாவுக்கு மாநில முதல்வரான எனக்கு அழைப்பு இல்லை. இது பிரதமர் மோடியின் அற்பத்தனமான செயலை காட்டுகிறது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை அழைக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நன்றி உணர்வு கூட அவர்களுக்கு கிடையாது” என்று கோபப்பட்டார்.

ஒரே நாளில் மூன்று தென்னிந்திய மாநிலங்களைக் குறிவைக்கக் காரணம் என்று பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, “ வர இருக்கும் தேர்தலில் வட இந்தியாவில் பாஜகவின் செல்வாக்கு பெருமளவு குறைந்துள்ளதாக தகவல்கள் வரும் நிலையில், அதை ஈடுகட்டத்தான் தென்னிந்தியாவை குறிவைக்கிறார் மோடி. வட இந்தியாவில் ராமர் கோயில் பிரச்சினையை கையிலெடுத்துப் பார்த்தோம். அது பாஜகவுக்கே எதிராகப் போகும் நிலையில் அது பெரிதுபடுத்தப்படவில்லை. வடக்கே இழக்கும் சீட்டுகளை தெற்கே எப்பாடுபட்டாவது ஈடுகட்டலாமா என்றுதான் இப்போது தெற்கே வந்திருக்கிறோம். இனி பாஜகவின் முக்கியத் தலைவர்கள் தெற்கைக் குறிவைத்து வருவார்கள்” என்கிறார்கள்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை! ...

3 நிமிட வாசிப்பு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

திங்கள் 11 பிப் 2019