மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: அதிமுக - பாஜக - பாமக - தேமுதிக கூட்டணிக்கு எத்தனை சீட்? ரகசிய சர்வே முடிவு!

டிஜிட்டல் திண்ணை: அதிமுக - பாஜக  - பாமக - தேமுதிக  கூட்டணிக்கு எத்தனை சீட்? ரகசிய சர்வே முடிவு!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸின் லொக்கேஷன் டெல்லி காட்டியது.

“பாஜக தலைமையில் இருந்து ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித் தனியாக டீம் அனுப்பி ஸ்பெஷலாக சில சர்வேக்களை எடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் பற்றி ஒரு சர்வே நடந்ததை சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டிருக்கிறோம். அடுத்த சர்வே ரிப்போர்ட்டும் இப்போது அமித் ஷா கையில் இருக்கிறது. அதில் உள்ள தகவல்களை இங்கே சுருக்கமாக சொல்கிறேன்.

அ.தி.மு.க, பாமக, தேமுதிகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் எவ்வளவு இடங்களில் ஜெயிக்க முடியும் என்பதுதான் இந்த சர்வே. இந்த சர்வேயில் பாஜகவுக்கு மட்டும் இரண்டு அல்லது 3 இடங்கள் கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

‘தமிழிசை சவுந்தர்ராஜன் தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் பார்டரில் ஜெயித்துவிடுவார். அவரது செயல்பாடுகள் காமெடியாக பார்க்க, பேசப்பட்டாலும் மக்களிடம் அவர் மீது சின்ன அனுதாபம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இது தவிர திருப்பூர் தொகுதி உறுதியாக ஜெயிக்கலாம். திருப்பூரைப் பொறுத்தவரை வாக்காளர்களில் வெளிமாநிலத்தவரும் அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் கொங்கு மண்டலம் என்பதால் அதிமுகவுக்கான செல்வாக்கும் திருப்பூரில் அதிகம் இருக்கிறது. இதெல்லாம் இணையும் போது, பிஜேபிக்கான வாய்ப்புகள் அதிகம்.

சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில்தான் எடப்பாடி சட்டமன்ற தொகுதி வருகிறது. சேலத்தில் எடப்பாடி பழனிசாமி மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லை.அதற்கு காரணம் சேலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பாலங்கள். சேலமா இல்லை பாலமா என கேட்கும் அளவுக்கு பாலம் கட்டி குவித்திருக்கிறார் எடப்பாடி. தமிழ்நாட்டிலேயே மேம்பட்ட சாலை வசதிகளை கொண்ட மாவட்டமாக சேலம்தான் இருக்கிறது. அதற்கு ஒரே காரணம் எடப்பாடிதான். எல்லாவற்றையும் விட சேலம் தொகுதியை தனது கௌரவ பிரச்சினையாகவே நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால் எப்பாடு பட்டாவது சேலம் தொகுதியில் யார் நின்றாலும் அவர்களை ஜெயிக்க வைக்கும் வேலையை முழு மூச்சாக எடப்பாடியே செய்வார்.

மொத்தமாக தமிழகத்தில் போட்டியிடும் பாஜக கூட்டணிக்கு இப்போதைய கணக்குப்படி 10 முதல் 12 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் ஒரு சில இடங்கள் கூடலாம். அல்லது குறையலாம்.இதை அதிகரிக்க வேண்டும் என்றால் இன்னும் கடுமையாக அடிமட்டத்தில் உழைக்க வேண்டும்’ என்று அந்த சர்வேயில் சொல்லப்பட்டு இருக்கிறது. சர்வேக்கள் சில சமயம் பலிக்கும், பல சமயங்கள் பொய்க்கும். ஆனாலும் பாஜக தரப்பில் சில தனியார் நிறுவனங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வே முடிவுகள் தமிழக ரிசல்ட்டுக்கு வெகு நெருக்கமாக இருக்கும் என்று கருதுகிறாராம் அமித் ஷா. இந்த சர்வே ரிப்போர்ட்டை கையில் வைத்துக் கொண்டு அடுத்தகட்ட வேலையில் இறங்கியிருக்கிறது பாஜக” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்தது வாட்ஸ் அப். “விஜய்காந்த் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்தாலும் இங்கே நடக்கும் அரசியல் நிகழ்வுகளை தினமும் விசாரித்து தெரிந்து கொள்கிறாராம். தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பான விஷயங்களை விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ்தான் பேசி வருகிறார். திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதில் பிரேமலதா, சுதீஷ் இருவருமே உறுதியாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஸ்டாலினிடமும் தேமுதிக பற்றி சிலர் பேச்சு எடுத்தபோதே, ‘அவங்க பேச்சே இங்கே வேண்டாம். அதைப் பற்றி யாரும் பேச வேண்டாம்’ என சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். மருத்துவ சிகிச்சை முடிந்து விஜயகாந்த் சென்னை திரும்பும் போது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிந்திருக்கும்” என்று முடிந்தது.

ரெஃப்ரஷ் செய்து பார்த்தோம். ஆஃப்லைனில் போயிருந்தது வாட்ஸ் அப்

திங்கள், 11 பிப் 2019

அடுத்ததுchevronRight icon