மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

பாஜக அரசின் தோல்விகள்: பட்டியலிட்ட தம்பிதுரை

பாஜக அரசின் தோல்விகள்: பட்டியலிட்ட  தம்பிதுரை

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கையைப் போல உள்ளதாக தம்பிதுரை விமர்சித்ததற்கு, மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படும் நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றே மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான தம்பிதுரை கூறிவருகிறார். மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து, ஒற்றை ஆளாக நின்று மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

பட்ஜெட் விவாதத்தில் பேசுவதற்காக ஒவ்வொரு விவகாரத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களையும், தரவுகளையும் முன்கூட்டியே தயாரித்து வைத்துக்கொண்ட தம்பிதுரை, டெல்லி செல்வதற்கு முன்பு தனது சக அதிமுக எம்.பி.க்களிடம், ‘பாருங்கள் நாளைக்கு பாஜக அரசை எப்படி வெளுத்து வாங்குகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றாராம்.

இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (பிப்ரவரி 11) மக்களவையில் நடைபெற்றது. அதிமுக சார்பில் பேசிய தம்பிதுரை எம்.பி மத்திய அரசின் 5ஆண்டுகால ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார்.

தம்பிதுரை பேசுகையில், “ தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே 5 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதிலெல்லாம் இந்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கலாம். ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் வரவுள்ள மக்களவை தேர்தல்தான். இது தேர்தல் அறிக்கைதானே தவிர இடைக்கால பட்ஜெட் அல்ல” என்று விமர்சித்தார்.

மேலும் தம்பிதுரை ஒவ்வொரு விவகாரங்களையும் பற்றி பேசியவற்றை பின்வருமாறு காண்போம்...

வேலைவாய்ப்பின்மை

இந்தியாவின் ஜிடிபி 7 சதவிகிதமாக உயர்ந்துள்ளதும், வணிக தரவரிசை உயர்ந்துள்ளதும் வரவேற்கத்தக்கது. ஆனால், இதனால் சாதித்தது என்ன? இந்திய பொருளாதாரத்தில் இது எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 4 வருடங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் வேலையின்மைப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அதனை சரிசெய்யுமா? கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் வேலையின்மை 6.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இப்பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது.

விவசாயிகள் பிரச்சினை

1995முதல் 2015 வரை 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மொத்த உணவு உற்பத்தியில் இந்தியா 2வது இடம் வகிக்கிறது. ஆனால் வறுமை ஒழிப்பில் 100வது இடத்தில் உள்ளோம். விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவரும் விவசாயிகளுக்கு இந்த 6 ஆயிரம் ரூபாய் போதுமானதாக இருக்குமா? வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் அறிவித்திருந்தால் கூட வரவேற்றிருப்போம். எனவே இந்த 6ஆயிரம் ரூபாய் போதாது.

தூய்மை இந்தியா திட்டம்

தூய்மை இந்தியா திட்டம் உண்மையிலேயே நல்ல திட்டம்தான், நான் மறுக்கவில்லை. ஆனால் இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிவறைகள் கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன. இதனை பெண்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும். 98 சதவிகிதம் கழிவறைகள் கட்டி முடித்து இலக்கை அடைந்துவிட்டதாக கூறுகிறீர்கள். ஆனால் கழிவறைகளை பயன்பாட்டில் உள்ளதா என்று உங்களுக்குத் தெரியுமா? எனது பார்வையில் தூய்மை இந்தியா திட்டம் தோல்விகரமான ஒரு திட்டமாகும். நீங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள் என்பதையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக நான் கிராமங்களுக்கு சென்று பார்க்கையில், இத்திட்டத்தால் மக்கள் பயன்பெறவில்லை என்பது தெரியவருகிறது.

மேக் இன் இந்தியா

இந்தியாவிலேயே பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா போன்ற வாசகங்களை மத்திய அரசு முன்வைத்துவருகிறது. அரசின் நோக்கம் நன்றாக இருக்கிறது, ஆனால் உண்மையில் நடப்பது என்ன? அதிகமான சீன பொருட்கள் இந்திய சந்தைகளில் கிடைக்கின்றன. என்னுடைய கரூர் தொகுதியில் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. கொசுவலைகள் அங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் நிலையில், வங்க தேசத்திலிருந்து கொசுவலைகள் சட்டவிரோதமாக இந்தியாவில் திணிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் விளக்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சீனா, வங்கதேசம் மற்றும் பிற நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் இந்தியாவில் விற்கப்படுவதால், இந்தியாவிலுள்ள சிறு தொழிற்கூடங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

பணமதிப்பழிப்பு

மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் என்ன சாதித்தீர்கள். இதனால் சிறுதொழில்கள், அமைப்பு சாரா தொழில்கள் அனைத்தும் நசிந்து, அழிந்துவிட்டன. மாணவர்களால் கல்லூரிகளில் தேர்வுக் கட்டணம் செலுத்த முடியவில்லை. இதில் ஏதோ அரசியல் ஆதாயம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், எனக்கு அது புரியவில்லை.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வரிக்கு காங்கிரஸும் பாஜகவும் சிறுகுழந்தை போல சொந்தம் கொண்டாடுகின்றன. காங்கிரஸாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் மாநிலங்களிடமிருந்து அதிகாரங்களை பறிக்கின்றன. ஆந்திர பிரதேச எம்.பி.க்கள் எதற்காக அவையின் மையப்பகுதிக்கு வந்து போராடுகிறார்கள். ஏனெனில் அவர்களிடம் பணம் இல்லை. ஜிஎஸ்டியில் அனைத்து பணமும் மத்திய அரசுக்குத்தான் செல்கிறது. ஜிஎஸ்டி வசூலில் தங்களது பங்கை மத்திய அரசிடம் கேட்டு பிச்சை எடுக்கும் நிலையில் மாநில அரசுகள் உள்ளன.

தமிழகத்திற்கான நிலுவைத் தொகை

பல்வேறு திட்டங்களுக்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டி இருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. இதில் எங்கு இருக்கிறது கூட்டாட்சித் தத்துவம்? ஏன் எங்களது தொகையை விடுவிக்கவில்லை? இப்படி இருந்தால் எங்களால் எப்படி மாநிலத்தை மேம்படுத்த முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “15 நிதிக் குழுவில் மக்கள் தொகை அடிப்படையில் நிதிஒதுக்கீடு என்று கூறிவிட்டார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அந்தத் திட்டமே தற்போது எங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையும், கஜா புயலுக்கு நாங்கள் கேட்ட தொகையையும் எங்களுக்கு வழங்குங்கள். கர்நாடக மாநிலம் மேகதாட்டுவில் அணை கட்டுவதாலும், முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் தமிழகத்தில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இவற்றை மறுபரீசிலனை செய்து தமிழகத்திற்கு மத்திய அரசு உதவ வேண்டும். தமிழகத்தின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இதற்கிடையே தம்பிதுரையின் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon