மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 22 ஜன 2021

2000 ரூபாய் உதவித் தொகை: திமுக எதிர்ப்பு, பாமக வரவேற்பு!

2000 ரூபாய் உதவித் தொகை: திமுக எதிர்ப்பு, பாமக வரவேற்பு!வெற்றிநடை போடும் தமிழகம்

தேர்தலை மனதில் கொண்டே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை முதல்வர் அறிவித்துள்ளதாக திமுக விமர்சித்துள்ள நிலையில், பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டமன்றம் இன்று (பிப்ரவரி 11) கூடிய நிலையில், 110 விதியின் கீழ் அறிவிப்பு வாசித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கஜா புயல், மழை பெய்யாததால் ஏற்பட்ட வறட்சி ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்” என்று அறிவித்தார். இதனால் 60 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்றும், இதற்காக 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், 2000 ரூபாய் தரப்படும் என்ற இந்த அறிவிப்புக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, கருத்து தெரிவித்த திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன், “இது மக்களவை தேர்தலை முன்னிட்டு கொடுக்கப்படும் பணம். மத்திய அரசு அறிவித்துள்ள பணத்தை தேர்தலுக்காக கொடுக்கப்படும் பணம் என்று தம்பிதுரையே விமர்சித்துள்ளார். வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணத்தை சட்டப்பூர்வமாக கொடுக்கிறார்கள்” என்று விமர்சித்தார்.

ஆனால் முதல்வரின் அறிவிப்புக்கு பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.தமிழக அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவியாகும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “கஜா புயல், வறட்சி, சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினை என மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ஏதேனும் உதவி வழங்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். அந்த வகையில் தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள ரூ.2000 நிதியுதவி ஏழைக் குடும்பங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon