மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

மிஷன் உபி: பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரியங்கா

மிஷன் உபி: பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரியங்கா

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி.

மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிக நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்ட உபியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரியான பிரியங்கா காந்தியை கிழக்கு உபி பொதுச் செயலாளராக நியமித்தார். பிரியங்காவின் நேரடி அரசியலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் பிரியங்கா `மிஷன் உபி` என்ற பிரச்சாரத்தை இன்று (பிப்ரவரி 11) தொடங்கி வைத்தார். அவர் மூன்று நாட்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் முகாமிட்டு அங்குள்ள முக்கிய தலைவர்களையும், மக்களையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

பிரியங்காவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மற்றொரு தேசிய பொதுச் செயலாளரான ஜோதிராதித்ய சிந்தியாவும் இன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். திறந்த வாகனத்தில் மூவரும் காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ சுமார் 15 கிமீ பேரணியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய ராகுல், ரஃபேல் விவகாரத்தைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி உபி மக்களின் பணத்தையும். விமானப்படையின் பணத்தையும் அனில் அம்பானிக்கு கொடுத்துவிட்டார் என்று குற்றம்சாட்டினார். உபியில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும். 2022ல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கத் தேவை இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்றார்.

இதற்கிடையே பிரியங்கா காந்தி ட்விட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளார். தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அவரை 80ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்துள்ளனர்.

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா தனது மனைவிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ''இந்திய மக்களுக்குச் சேவை செய்ய, உத்தரப் பிரதேசம் நோக்கி பயணப்படும் உனக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது மிகவும் பழிவாங்கும் அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டியது பிரியங்காவின் கடமை, அவரை மக்களின் கைகளில் ஒப்படைத்துள்ளோம். பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon