மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 7 ஜூலை 2020

அர்னாப் மீது வழக்கு: பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது!

அர்னாப் மீது வழக்கு: பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது!

காவல் துறை வசமிருக்கும் ஆவணங்கள் எப்படி பத்திரிகையாளர்களுக்குக் கிடைக்கின்றன என்பது குறித்து விசாரணை மேற்கொள்வது பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று ஸ்க்ரோல்.இன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரச்சினைக்குரிய ரிபப்ளிக் தொலைக்காட்சி சார்ந்த பிரச்சினை என்றாலும், இந்த நிலையில் மாற்றமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக, சமீபத்தில் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகின. அப்போது, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான புகைப்படங்கள், தகவல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் ஒளிபரப்பாகின. அப்போது, சசி தரூரின் மின்னஞ்சலுக்கு வந்த சில தகவல்களும் வெளியானதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் டெல்லி போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) எவ்வாறு அர்னாப் கோஸ்வாமிக்குக் கிடைத்தது என்பது பற்றி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது டெல்லி நீதிமன்றம். அவர் மீது வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

“சில ஆவணங்கள் டெல்லி காவல் துறையில் கோப்புகளில் உள்ள குறிப்புகளின் நகல்கள், டெல்லி காவல் துறையில் புகார்தாரர் கொடுத்த மனுவின் நகல், புகார்தாரர் சார்பாக நாரயண் சிங் என்பவர் அளித்த மனு மற்றும் பிரேதப் பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் அதில் அடங்கியிருந்தன” என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை காவல் துறை மற்றும் நீதித் துறை தவிர மற்றவர்கள் பார்ப்பது சட்டவிரோதமானது என்று சசிதரூர் கூறியிருந்தார். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விசாரணையில் இருக்கும் வழக்கு விவரங்களைப் பெற அனுமதி கிடையாது என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர். அது மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்து சில தகவல்களை ஒளிபரப்பியதாகவும் ரிபப்ளிக் தொலைக்காட்சி மீது சசி தரூர் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

“குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் வசம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எப்படிச் சென்றன என்பது குறித்து காவல் துறை விசாரணை தேவைப்படுவதாக நீதிமன்றம் கருதுகிறது” என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அர்னாப்புக்கு எதிராக குற்றவியல் அவதூறு வழக்கும், சிவில் அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார் சசி தரூர். இந்த இரண்டு வழக்கு நடைமுறைகளும் தொடர்ந்துவரும் நிலையில், தேவைப்பட்டால் சசி தரூர் மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்திலும் விசாரணை நடத்தப்படலாம். பொதுநலத்தோடு தொடர்பற்ற மற்றும் தனிப்பட்ட நபர் சார்ந்த விஷயங்களை ஒளிபரப்பியதன் மூலமாகச் சட்டத்தை மீறியிருக்கிறார் என்று அர்னாப் மீது குறிவைக்கப்படலாம்.

எது எப்படியாயினும் காவல் துறை ஆவணங்கள் பத்திரிகையாளர்களின் கைகளுக்குப் போய் சேர்ந்தது எப்படி என்று விசாரணை நடத்துவதென்பது ஆபத்தானது. பத்திரிகைச் சுதந்திரத்துக்குச் சம்பந்தமில்லாத ரிபப்ளிக் தொலைக்காட்சி சார்ந்த பிரச்சினை என்றாலும் இந்த நிலையில் மாற்றமில்லை. பொதுமக்களிடம் இருந்து ரகசியமாக மறைக்கப்படும் விஷயங்களைப் பெருவாரியான மக்களின் விருப்பத்துக்கேற்ப வெளிப்படையாக அறிவிக்கும் வகையிலேயே இது போன்ற ஆவணங்கள் பதிவு செய்யத் தகுந்ததா, ஒளிபரப்பத் தகுந்ததா என்று பத்திரிகையாசிரியர்களால் முடிவு செய்யப்படுகிறது.

இந்திய அரசாட்சி மற்றும் விசாரணை அமைப்புகள் வெளிப்படைத்தன்மைக்கு எதிராகச் செயலற்று இருக்கும் நேரத்தில், சில நோக்கங்களுடன் மட்டும் செய்திகள் கசியவிடப்படும் சூழலில், சில தகவல்களைப் பொதுமக்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் மூலமாக, பொதுமக்களின் விருப்பத்துக்கேற்ற ரகசியங்களை அம்பலப்படுத்தும் மூலாதாரங்களைத் தேடும் நிலை பத்திரிகையாளர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நீதிமன்ற உத்தரவு அர்னாப் கோஸ்வாமிக்கு எதிரானவர்களுக்கு உவப்பானதாகத் தோன்றலாம். ஆனால், இதன் மூலமாக அரசுக்கு எதிரான தகவல்களைத் திரட்டும் எந்தவொரு பத்திரிகையாளரும் எளிதாக போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற எச்சரிக்கை இதன் பின்னுள்ளதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி: ஸ்க்ரால்.இன்

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon