மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 14 அக் 2019

கந்துவட்டிக் கும்பலுடன் தொடர்பு இல்லை: கருணாகரன்

கந்துவட்டிக் கும்பலுடன் தொடர்பு இல்லை: கருணாகரன்

கந்துவட்டிக் கும்பலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் கருணாகரன்.

சீயோன் இயக்கிய பொதுநலன் கருதி படத்தில் கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித், அனு சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏவிஆர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சீயோன், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கருணாகரன் படத்தின் புரொமோஷனுக்காக ஒத்துழைக்கவில்லை என்று புகார் தெரிவித்தார்.

பிப்ரவரி 9 இந்தப் படம் வெளியான நிலையில் அன்றே. இயக்குநர் சீயோனும், பொதுநலன் கருதி படத்தின் இணை தயாரிப்பாளரும் நடிகர் கருணாகரன் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

“படத்தின் சிறப்புக் காட்சி முடிந்து இயக்குநர் சீயோன் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது கருணாகரன் அனுப்பிய ஆட்கள் அவரைத் தாக்க முயற்சித்தனர். படம் பிரச்சினையின்றி வெளியாக வேண்டும் என்பதால் இயக்குநர் இந்த விவகாரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுமட்டுமல்லாமல், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்தை பிப்ரவர் 7ஆம் தேதி அலைபேசியில் தொடர்புகொண்ட கருணாகரன் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார்” என புகார் அளித்தனர்.

இந்நிலையில் கருணாகரன் இதை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பொதுநலன் கருதி பட இயக்குநர் சீயோன் மற்றும் அதன் இணைத் தயாரிப்பாளர் என்னைப் பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுகள் முழுவதுமே உண்மை இல்லை.

படத்தின் ஆடியோ ரிலீஸ் பிப்ரவரி 4ஆம் தேதி என்று சொல்லி என்னை அழைத்ததே பிப்ரவரி 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணிக்குத் தான். கால அவகாசம் குறைவாக இருந்ததால் முன்னதாக ஒப்புக்கொண்ட பணிகளை ஒதுக்கிவைக்க முடியவில்லை. இவற்றையெல்லாம் தெளிவாக இயக்குநரிடமும், இணை தயாரிப்பாளரிடமும் கூறியிருந்தேன். படப்பிடிப்புப் பணிகள் முடிந்து நான் சென்னைக்கு வந்ததே பிப்ரவரி 8ஆம் தேதிதான். நான் வேண்டுமென்றே ஆடியோ ரிலீஸுக்கு வரவில்லை என்று அவர்கள் என்மீது குறை சொல்கிறார்கள். அது உண்மையில்லை.

கருணாகரனால் அனுப்பப்பட்ட மர்ம நபர்கள் தாக்க முயற்சித்தனர் என்றும் படத்தின் டீசர் வெளியான நவம்பர் 27ஆம் தேதி அன்றே கந்துவட்டிக் கும்பல் இயக்குநரை தொலைபேசியில் மிரட்டியதாகவும் பிப்ரவரி 9 அன்று புகார் கொடுத்திருக்கிறார்கள்.

எனக்கும் எந்தக் கந்துவட்டிக்காரருக்கும் தொடர்பு ஏதும் இல்லை. ஏனெனில் நான் அப்படி வளரவில்லை. எனது தந்தை காளிதாஸ் தேசத்தின் பாதுகாப்புக்காக உழைக்கும் மத்திய அரசின் முக்கிய துறையில் பணியாற்றி விருது பெற்றவர். இவர்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற வழிகளில் நான் வளர்க்கப்படவில்லை. கந்துவட்டிக்காரர்களுடன் இணைந்து படத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை.

கடனால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கும், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருக்கும் என்னைக் கந்துவட்டிக் கும்பலுடன் தொடர்புப்படுத்திப் பேசுவது வேதனை அளிக்கிறது. எனக்கும் சமூக உணர்வு இருக்கிறது. கந்துவட்டிக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு வன்முறையை நம்பி வாழும் தேவையில் நான் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கருணாகரன் கூறியுள்ளார்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon