மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

லோக் ஆயுக்தா: தமிழக அரசுக்குக் கெடு!

லோக் ஆயுக்தா: தமிழக அரசுக்குக் கெடு!

லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை நான்கு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

2013ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டது. ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தா சட்டத்தை எல்லா மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் நெருக்கடி கொடுத்ததன் காரணமாக, 2017 ஜூலை 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்த போது தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் லோக் ஆயுக்தாவை செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நவம்பர் மாதம் முதற்கட்ட பணியாக லோக் ஆயுக்தா அமைப்புக்கு, செயலாளர், இயக்குநர், சார்பு செயலாளர், பதிவாளர், சார் பதிவாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என 26 பணியிடங்களை உறுதி செய்து அதற்கான அறிவிப்பும் வெளியிட்டது தமிழக அரசு.

இதுதொடர்பான வழக்கு மீண்டும் இன்று (பிப்ரவரி 11) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒடிஷா, தமிழகம் உள்ளிட்ட அரசுகளின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகம் சார்பில் தலைமை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், லோக் ஆயுக்தா அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டன. லோக் ஆயுக்தாவின் குழு அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. எனவே 8 வார கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதை ஏற்ற நீதிபதிகள், லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்துக்குள் தேர்வு செய்து, அடுத்த நான்கு மாதத்துக்குள் லோக் ஆயுக்தா செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon