மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

மாணவி சோபியா வழக்கு: தமிழிசைக்கு நோட்டீஸ்!

மாணவி சோபியா வழக்கு: தமிழிசைக்கு நோட்டீஸ்!

மாணவி சோபியா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று சென்னையிலிருந்து தூத்துக்குடிக்குச் சென்ற விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணித்தார். அதே விமானத்தில் இருந்த கனடாவில் உயர் கல்வி படிக்கும் தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சாமியின் மகள் லூயிஸ் சோபியாவும் பயணித்தார். அவர், விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால் தமிழிசைக்கும் லூயிஸ்சோபியாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாணவி சோபியா மீது தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. “இந்த வழக்கு தனக்கு முற்றிலும் எதிரான வழக்கு, நான் தான் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால், எனது மனுவை எந்தப் பரிசீலனையும் செய்யாமல் என் மீதே வழக்கு தொடரப்பட்டுள்ளது, எனவே இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று மாணவி சோபியா மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் மேல்விசாரணை செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது உயர் நீதிமன்றம். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று (பிப்ரவரி 11) விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வார காலம் நீட்டித்து உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இந்த வழக்கை ரத்து செய்வது குறித்து புகார் மனுதாரரான பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை 4 வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon