தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் குமரி மாவட்ட கடற்கரையும் ஒன்று. இந்தக் கடற்கரை பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியில் படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதாகவும், அதுபோன்று அங்குள்ள திருவள்ளுவர் சிலையும் பராமரிக்கப்படுவதில்லை. உப்புக் காற்றால் திருவள்ளுவர் சிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் - காந்தி மண்டபம் இடையே பாலம் கட்ட உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (பிப்ரவரி 11) விசாரணைக்கு வந்த போது பராமரிப்பு காரணமாகவே படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், இவ்வழக்கு தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது, அப்போது தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வள்ளுவரின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.