மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

கூட்டணி அரசால் சாதிக்க முடியாதா?: தேவகவுடா

 கூட்டணி அரசால் சாதிக்க முடியாதா?: தேவகவுடா

எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தால் நாளுக்கு ஒரு பிரதமர் இருப்பார் என்று பாஜக தலைவர் அமித் ஷாவும், கூட்டணி ஆட்சியால் உறுதியான கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது என்று பிரதமர் மோடியும் தங்களது பிரசாரக் கூட்டங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் அவர்களுக்கு இன்று நாடாளுமன்ற மக்களவையில் பேசும்போது பதில் அளித்தார் முன்னாள் பிரதமர் தேவகவுடா. ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியில் பிரதமராக பதவி வகித்த தேவ கவுடா இன்று மக்களவையில் பேசும்போது,

“கூட்டணி அரசுகளால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று பிரதமர் மோடி சொல்லிவருகிறார். முதல் கூட்டணி ஆட்சி வாஜ்பாய் தலைமையில்தான் அமைந்தது. அதன் பின் நான் கூட்டணி ஆட்சியின் பிரதமராக 320 நாட்கள் பதவி வகித்தேன். கூட்டணி அரசாக இருந்தாலும் அந்த அரசில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.

மன்மோகன் சிங் 91 -96 இல் கொண்டுவந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களை நாங்கள் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செயல்படுத்தினோம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவருவதற்காக தொடக்கத்தை எங்கள் ஆட்சியில்தான் ஏற்படுத்தினோம். லோக்பால் அமைப்பில் பிரதமரையும் உட்படுத்த முடியும் என்பதை தனிப்பட்ட முறையில் நான் பிரதமராக இருக்கும்போதே வலியுறுத்தினேன்.

மத்தியில் அதிகாரக் குவிப்புக்கு எதிரான அதிகாரப் பரவல், தொலைத் தொடர்புத் துறையில் புரட்சி, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா என முக்கியமான அனைத்தும் கூட்டணி அரசுகளால் கொண்டுவரப்பட்டவையே” என்று பட்டியலிட்ட தேவகவுடா,

“நாங்கள் இப்போது கர்நாடகாவிலும் கூட்டணி அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் கர்நாடக அரசு வீழ்வதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” என்று கூறினார் தேவ கவுடா.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon