மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 3 டிச 2020

ஒரே மேடையில் ஸ்டாலின், கமல்ஹாசன், பொன்.ராதா

ஒரே மேடையில் ஸ்டாலின், கமல்ஹாசன், பொன்.ராதா

திமுகவை கமல்ஹாசன் விமர்சித்திருந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் ஸ்டாலினும், கமல்ஹாசனும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், திருவள்ளூர் எம்.எல்.ஏ.வுமான வி.ஜி.ராஜேந்திரன் மகள் பிரியதர்ஷினி, பாலிமர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் வருண் ஆகியோரின் திருமணம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்ரவரி 11) திருவான்மியூரிலுள்ள கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக பொருளாளர் துரைமுருகன், எம்.பி கனிமொழி மற்றும் திமுகவின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திமுகவை ஊழல் கட்சி என்று கமல்ஹாசன் விமர்சித்துவரும் நிலையில், இன்றைய முரசொலியில் பாஜகவின் அழுத்தத்திற்காக தன்னிலை மறந்து திமுகவை விமர்சிக்கிறார் என்று கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து சிலந்தி என்னும் பெயரில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமண விழா மேடைக்கு கமல்ஹாசன் வந்தபோது, ஸ்டாலின் எழுந்து நின்று வரவேற்றார். இருவரும் கைகுலுக்கிக் கொண்டு, அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இதுபோலவே எதிரணியில் இருக்கும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேடைக்கு வந்தபோது, அவரை ஸ்டாலின் உள்ளிட்டோர் எழுந்து நின்று வரவேற்றனர்.

விழாவில் பேசிய ஸ்டாலின், “திமுகவின் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்க உள்ளோம். ஆனால் இன்னொரு கூட்டணி அமையவுள்ளதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சியான அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்பது நாள்தோறும் தினசரிகளில் வந்துகொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலுடன் 21 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் வரவுள்ளது. 6 மாதத்திற்கு மேல் எந்த சட்டமன்ற தொகுதியும் காலியாக இருக்கக் கூடாது என்பதால் தேர்தலை வைத்துத்தான் தீர வேண்டும். ஆனால் இடைத் தேர்தலை வரவிடாமல் தடுக்கும் சூழ்ச்சி வேலைகளை மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “நேற்று கூட பிரதமர் மோடி திருப்பூரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சென்றிருக்கிறார். அரசு நிகழ்வு என்றால் தமிழ்த்தாய் வாழ்த்தும், நாட்டுப் பண்ணும் இசைக்கப்பட வேண்டும். ஆனால் ஏற்கனவே மதுரையில் நடைபெற்ற நிகழ்விலும், திருப்பூர் நிகழ்விலும் இது பின்பற்றப்படவில்லை. ஆனால், பிரச்சாரத்தில் பேசும்போது தமிழப் பற்றியும் தமிழிலும், திருக்குறளை மேற்கொள் காட்டியும் பேசுகிறார் என்றால் அவர் மக்களை ஏமாற்றுகிறார் என்றுதானே பொருள். எனவே வரும் தேர்தலில் மத்தியில், தமிழகத்திலும் நல்ல விடிவு ஏற்பட நீங்களெல்லாம் துணை நிற்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon