மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 7 டிச 2019

21 தொகுதி இடைத்தேர்தலைத் தள்ளிவைக்க அதிமுக சதி: கே.எஸ். அழகிரி

21 தொகுதி இடைத்தேர்தலைத் தள்ளிவைக்க அதிமுக சதி: கே.எஸ். அழகிரி

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அது நாடாளுமன்ற தேர்தல் ஆக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல் ஆக இருந்தாலும் சரி, அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து பூர்வாங்க பணிகளையும் நிறைவாக செய்து இருக்கிறோம் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிப்ரவரி 10 தேனியில் கூறியிருந்தார். மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று சில நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருந்தார்

ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “ தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடத்தாமல் தள்ளி வைப்பதற்கு.அ.தி.மு.க. தலைமை பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது” என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதனால்... தகுதி நீக்கம்செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகள், திருவாரூர், திருப்பரங்குன்றம் ( இத்தொகுதி பற்றிய வழக்கு நிலுவையில் இருக்கிறது), ஓசூர் ஆகிய தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடக்குமா என்று கேள்விக்குறியாகியிருக்கிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் அழகிரி, இன்று பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,

“இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெற முடியாத அளவில் மக்கள் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த எதிர்ப்பை எப்படியாவது சரிக்கட்டுவதற்கு அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. திரைமறைவு தந்திரங்களை செய்து வருகிறது. அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்தால் படுகுழியில் விழ நேரிடும் என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள முதலமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்க பேரம் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடத்தாமல் தள்ளி வைப்பதற்கு அ.தி.மு.க. தலைமை பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது. கடந்த 15 மாதங்களாக சட்டமன்ற உறுப்பினர்களே இல்லாமல் அந்த தொகுதிகளில் மக்கள் குறைகளை கேட்க எவரும் நாதியில்லாத நிலை இருந்து வருகிறது. இந்த அவலநிலையில் இருந்து 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து நடத்திட வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ள அழகிரி, தேர்தல் ஆணையம் தனது தனித்தன்மையை இழந்துவிட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

“ உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் 16 நாடாளுமன்றத் தேர்தல்களை மிகச் சிறப்பாக நடத்தி பெருமை பெற்ற தேர்தல் ஆணையம் சில ஆண்டுகளாக தமது தனித் தன்மையை இழந்து வருகிறது. மத்திய பா.ஜ.க.வின் கண் அசைவிற்கு ஏற்றாற் போல் செயல்படுகிற அமைப்பாகத் தேர்தல் ஆணையம் மாறி வருகிறது. இந்தப் பின்னணியில் தான் நரேந்திர மோடி மூலம் அ.தி.மு.க. தலைமை 21 சட்டமன்ற தொகுதி தேர்தல்களையும் நடத்தாமல் ஒத்திப் போடுகிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுவே அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணிக்கான பேரங்களில் ஒன்றாகப் பேசப்படுகிறது. அப்படி தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பறிபோகிற நிலை ஏற்பட்டு, ஆட்சி பறிபோகும் என்கிற அச்சத்தின் காரணமாக இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அ.தி.மு.க. ஈடுபட்டு வருகிறது” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள அழகிரி,

“அரசமைப்புச் சட்டப்படி, ஜனநாயக முறைப்படி 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு இணைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும். இதில் அ.தி.மு.க. தலைமையின் வற்புறுத்தலின் காரணமாக மத்திய பா.ஜ.க. அரசின் நிர்ப்பந்தத்திற்கு தேர்தல் ஆணையம் பணிந்து போகுமேயானால் அதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும்” என்று எச்சரித்துள்ளார்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon