சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணம் இன்று (பிப்ரவரி 11) காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டுக் கடந்த 8ஆம் தேதி மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
9ஆம் தேதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் ராதா கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கே அழைப்புவிடுக்கப்பட்டது. நேற்று (பிப்ரவரி 10) மெகந்தி விழா நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.
திருமணத்திற்காக அரசியல் தலைவர்கள், திரைத்துறையைச் சார்ந்த பலருக்கும் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.
இன்று காலை நடைபெற்ற திருமண நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ், ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.