மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

சந்திரபாபு உண்ணாவிரத போராட்டத்தில் ராகுல்

சந்திரபாபு உண்ணாவிரத போராட்டத்தில் ராகுல்

ஆந்திர அரசுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து பிரதமர் மோடிக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (பிப்ரவரி 11) உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசிடம் தொடர்ந்து ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்து வருகிறார். ஆனால், மத்தியில் ஆளும் கட்சி இக்கோரிக்கையை இதுவரை நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியது.

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தற்போது பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தை கையிலெடுத்துள்ளார்.

இன்று காலை டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய அவர் பின்னர் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டையை அணிந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சில அமைப்புகள் எனப் பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இன்று இரவு 8 மணி வரை தொடர உள்ள இப்போராட்டம் டெல்லியில் உள்ள ஆந்திர பவன் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. சந்திரபாபு நாயுடுவுக்கு நேரில் ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”ஆந்திர மக்களுக்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்பேன். மோடி எந்த மாதிரியான பிரதமர்? அவர் ஆந்திர மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மோடி எங்குச் சென்றாலும் பொய் சொல்கிறார். அவர் மக்களின் நம்பிக்கையைப் பெறவில்லை” என்று குறிப்பிட்டார். மேலும் ஒவ்வொரு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கும் ஊழல் எதிர்ப்பு விதி உள்ளதாகக் குறிப்பிட்ட ராகுல், இந்து நாளிதழ் வெளியிட்ட கட்டுரையின் மூலம் பிரதமர் அதனை அகற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக பேசிய சந்திரபாபு நாயுடு, ”நீங்கள் சிறப்பு அந்தஸ்தை கொடுக்காவிட்டால், அதனை எப்படிப் பெற்று கொள்வது என்பது என்று எங்களுக்குத் தெரியும், சிறப்பு அந்தஸ்து என்பது ஆந்திர மக்களின் சுய மரியாதை ஆகும். எங்களுடைய சுய மரியாதை பாதிக்கப்படும் போது அதை நாங்கள் பொறுத்துக்கொள்ளமாட்டோம்” என்று எச்சரித்துள்ளார். இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேச எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக சிபிஐக்கும் மத்திய அரசுக்கும் எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தை நடத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon