மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

இப்படியும் ஒரு காரணமா? - காம்கேர் கே. புவனேஸ்வரி

இப்படியும் ஒரு காரணமா? - காம்கேர் கே. புவனேஸ்வரி

எந்தப் பாதையில் உங்கள் பயணம்?-19

பத்தாம் வகுப்பு வரை ராஜனுக்கு மற்ற எல்லா சப்ஜெக்ட்டுகளைவிட அறிவியல் பாடத்தில் ஆர்வம் அதிகம் இருந்தது.அவனாகவே பவர்பாயிண்ட், ஃபோட்டோஷாப், ஃபளாஷ் எனக் கற்றுக்கொண்டு அதில் அனிமேஷனில் ஏதேனும் செய்துகொண்டே இருப்பான். பள்ளியில் நடக்கும் அறிவியல் கண்காட்சிகளில் இவனது அனிமேஷன் படைப்புகள் பரிசுகளை வென்றிருக்கின்றன.

+1, +2 வில் பயாலஜி, ஜுவாலஜி எடுத்து படிக்க வைத்தால், நேரடியாக மெடிசன் துறை கிடைக்கவில்லை என்றாலும் மெடிகல் சார்ந்த ஏதேனும் ஒரு துறைக்குச் செல்லலாம் என அவன் பெற்றோர் நினைத்திருந்தார்கள்.

அதன்படி +1, +2 வில் பயாலஜி, ஜுவாலஜி பிரிவில் சேர்த்தார்கள். ஆரம்பத்தில் நன்றாக படித்துவந்த ராஜன், நாட்கள் செல்லச் செல்ல அந்த சப்ஜெக்ட்டில் மதிப்பெண் குறைந்து எடுக்க ஆரம்பித்தான்.

விளையாட்டிலும் மற்ற போட்டிகளிலும் கலந்துகொள்வதில் கவனம் செல்வதால் இருக்குமோ என நினைத்து அவற்றைக் குறைத்துக்கொள்ளச் சொல்லி அவனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள்.

படிப்பைத் தவிர மற்ற விஷயங்களைக் குறைத்துக்கொள்ளத் தொடங்கியதிலிருந்து மதிப்பெண் இன்னும் குறைந்துகொண்டே சென்றது.

அவனுடைய நண்பர்கள் வட்டம் சரியாக இல்லையோ என நினைத்து அவர்களைக் கண்காணிக்கத் தொடங்கினார்கள். அவற்றிலும் எந்தக் குறையும் இல்லை. எல்லோருமே நல்ல பழக்க வழக்கங்களுடன் நன்றாகவே படிக்கும் மாணவர்களே.

தாங்களும் அன்பாகவும், அனுசரனையாகவும் பேசிப் பார்த்தும் ஏன் அவனுக்குப் பிடித்தத் துறையில் ஆர்வம் குறைந்து போகிறது என புரியவில்லை.

இறுதியில் எஜுகேஷனல் கவுன்சிலிங்கிற்குச் சென்றார்கள். அவர்கள் ஏதோதோ கேள்வி பதில்கள் அடங்கியா சார்ட் கொடுத்து பதிலளிக்கச் சொன்னார்கள். மாணவர்கள் மற்றும் டீன் ஏஜ் பிரிவினருக்கான குரூப் கவுன்சிலிங் தவிர, தனியாக One to One கவுன்சிலிங் செய்ய ஒரு மனநல மருத்துவரை வைத்துப் பேசினார்கள்.

அது மாணவனுக்கு மட்டுமில்லாமல் பெற்றோருக்குமான கவுன்சிலிங். ராஜனுக்குத் தனியாக, அவன் அம்மா, அப்பா இருவருக்கும் சேர்த்து, இவருக்கும் தனித் தனியாக, இறுதியில் மூவருக்கும் சேர்த்து என அலசி ஆராய்ந்து ஒரு ஆய்வையே செய்து முடித்தார்கள்.

கடைசியில் அவர்கள் சொன்ன காரணம் ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது ராஜனின் பெற்றோருக்கு.

பயாலஜி, ஜுவாலஜி வகுப்பெடுக்கும் ஆசிரியரின் கடுமையான நடவடிக்கை, அணுகுமுறை இவற்றினால்தான் ராஜனுக்கு அந்த சப்ஜெக்ட் மீதே வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு ஆசிரியரின் அணுகுமுறை, ஒரு மாணவனின் ஈடுபாட்டையே சிதைக்கும் அளவுக்கு மனதின் ஆழத்துக்குச் செல்லும் என்பது எவ்வளவு ஆபத்தானது.

நம் நாட்டில் பாடம் எடுக்கும் ஆசிரியரைப் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் இன்னும் நிலைமை மோசமாகிவிடுமே.

அமெரிக்கா போன்ற சில மேலைநாடுகளில் மாணவர்களுக்கு ஆசிரியரை ஏதேனும் ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்றால் மாணவர்களின் பெற்றோர் அவர்களிடம் நேரடியாக அந்தக் காரணத்தைச் சொல்லி வேறு வகுப்புக்குத் தங்கள் பிள்ளைகளை மாற்றிக்கொள்வார்கள். அதை அந்த ஆசியர்களும் அதைப் பெருந்தன்மையோடு எடுத்துக்கொள்வார்கள்.

ஆசிரியர்களை மாணவர்கள் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கமெல்லாம் அங்கு உண்டு. அதனால் மரியாதை கொடுக்க மாட்டார்கள் என்று பொருளல்ல. பெயர் சொல்லி அழைப்பதோ, அவர்கள் எதிர்படும்போதெல்லாம் வணக்கம் சொல்லாமல் இருப்பதோ, வகுப்புக்குள் ஆசிரியர் நுழையும்போது எழுந்து நிற்காமல் இருப்பதோ அங்கு பெரிய குற்றமில்லை. அது அவர்கள் வழக்கம். அவர்களின் புரிதல்.

வருடத்தின் நட்ட நடுவில் வேறு பள்ளியில் சேர்ப்பதென்பதும் கடினம். என்ன செய்வதென்று யோசித்த ராஜனின் பெற்றோர் ஸ்பெஷல் டியூஷன் வைத்துப் பார்த்தார்கள். தாங்களும் நேரடியாக அவனுடன் அமர்ந்து பேசிப் புரிய வைத்தார்கள்.

‘மற்றவர்களை நாம் மாற்ற முடியாது. அவர்களின் செயல்பாட்டினால் நாம் நம் இயல்பிலிருந்து மாறக் கூடாது. நமக்குப் பிடித்த விஷயங்களை விட்டுவிடக் கூடாது’ என்றெல்லாம் உளவியல் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் பேசியும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவன் மனதில் ஏற்பட்ட மனத்தடை உடையவே இல்லை.

எப்படியோ தேர்வெழுதி அந்த சப்ஜெக்ட் தவிர மற்ற எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண் பெற்றுவிட்டான்.

அவன் விருப்பப்படி மெடிசன் எடுக்க முடியவில்லை. பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தான். அந்தத் துறையில் அவனால் ஜெயிக்க முடிந்ததா? இல்லையா?

பார்ப்போம்.

கற்போம்… கற்பிப்போம்!

(கட்டுரையாளர் : காம்கேர் கே.புவனேஸ்வரி - காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் ஐடி நிறுவனத்தின் CEO. நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர். M.Sc., Computer Science, M.B.A பட்டங்கள் பெற்றவர். தொழில்நுட்பம், வாழ்வியல் குறித்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது சாஃப்ட்வேர், அனிமேஷன் தயாரிப்புகளும் தொழில்நுட்பப் புத்தகங்களும் பல கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

கல்வியே அஸ்திவாரம், திறமையே கட்டடம்!

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon