மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

உலகக் கோப்பை: இந்தியா, இங்கிலாந்துக்கு வாய்ப்பு!

உலகக் கோப்பை: இந்தியா, இங்கிலாந்துக்கு வாய்ப்பு!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30ஆம் தேதி தொடங்க உள்ளது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்தத் தொடருக்காக ஒவ்வொரு அணியும் தயாராகிவருகின்றன. கோப்பையை வெல்வது எந்த அணி என்ற விவாதங்கள் சர்வதேச அளவில் நடைபெற்றுவருகிறது. பல முன்னாள் வீரர்கள் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்குக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும் தற்போது அந்த அணியின் உதவி பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்லும் என்று கூறினாலும் ஸ்மித்தும், வார்னரும் வந்து அணியைப் பலப்படுத்த வேண்டும். அவர்களின் வருகையே வெற்றியை தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார். இருப்பினும் இந்தியா, இங்கிலாந்து அணிகள் முன்னிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த முறை நாங்கள் உலக கோப்பையை வென்றோம். இந்த முறையும் எங்களால் உலக கோப்பையை நிச்சயம் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். தற்சமயம் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியாவும், இங்கிலாந்தும் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் ஸ்டீபன் ஸ்மித்தும், டேவிட் வார்னரும் திரும்பியதும், எங்கள் அணியும் பலம் வாய்ந்ததாக உருவெடுத்துவிடும். ஸ்மித்தும், வார்னரும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அனுபவசாலிகள். நெருக்கடியான சூழலை திறம்பட கையாளக்கூடியவர்கள். அவர்கள் வந்ததும் உடனடியாக எங்கள் அணியைப் பார்க்க வலுமிக்கதாக தெரியத் தொடங்கி விடும்.

உலகக் கோப்பை போட்டி நடக்கும் இங்கிலாந்தில் உள்ள வானிலை, எங்களது ஆட்டப் பாணிக்கு சாதகமானது. அதனால் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் இருக்கும்” என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன், “ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்று வருகிறது.

என்னைப் பொறுத்தவரை அஸ்வின் இன்னும் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் தான். குல்தீப் யாதவும், யுஜ்வேந்திர சஹலும் இந்திய துணைக் கண்டத்தில் சிறப்பாக வீசுகிறார்கள். உலகக் கோப்பை நடைபெறும் இங்கிலாந்தில் அவர்களது பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இங்கிலாந்து ஆடுகளங்கள் ‘ஸ்விங்’ பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

இந்தியா அல்லது இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon