மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

கட்ட பஞ்சாயத்து நடத்தும் சங்கங்கள்!

கட்ட பஞ்சாயத்து நடத்தும் சங்கங்கள்!

தமிழ் சினிமா 365: பகுதி - 37

இராமானுஜம்

தமிழ்த் திரையுலகில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பைனான்சியர்கள் சங்கம் குறித்து தொடர்ந்து பதிவு செய்துவருகிறோம். தொடரை படித்து வரும் நண்பர்கள் நம்மிடம் இது போன்று பல்வேறு அமைப்புகள் தமிழ் சினிமாவில் நீர் குமிழி போன்று தோன்றுவதும் நீர்த்துப் போவதும் சகஜம் என்று தெரிவித்தனர்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நீண்டதொரு வேலை நிறுத்தத்தை கடந்த வருட தொடக்கத்தில் நடத்திய போது அதனை முறியடிக்கவும், சங்கத் தலைமையை பலவீனப்படுத்தவும் அபிராமி ராமநாதன் தலைமையில் ‘தமிழ் சினிமா வர்த்தக சபை’ என்றொரு அமைப்பை தொடங்கினார்கள். அந்த அமைப்பு தமிழ் சினிமா வளர்ச்சிக்கு என்ன செய்தது என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.

படத் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களிடம் பட வெளியீட்டீன் போது வாங்கிய அட்வான்ஸ் தொகை வசூல் மூலம் கிடைக்காத நிலையில் எஞ்சிய தொகையை தயாரிப்பாளர்கள் திருப்பிதர வேண்டும். இதனை செய்யாத தயாரிப்பாளர்கள் அடுத்து படம் தயாரிக்கும் போது அல்லது வெளியிடுகிற போது அவரிடம் இருந்து எஞ்சிய தொகையை வசூல் செய்து கொடுக்கவும், விநியோகஸ்தர் - தயாரிப்பாளருக்கு இடையில் தொழில் ரீதியாக ஏற்படுகிற பிரச்சினைகளை பேசி தீர்க்கவும் உருவாக்கப்பட்டது ‘திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு’.

இந்த அமைப்பு பைனான்சியர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மதுரை அன்பு செழியன் விருப்பப்படியே செயல்பட்டு வந்தது, வருகிறது. சாதாரணமான விநியோகஸ்தர், தயாரிப்பாளர்கள் பிரச்சினையை இந்த அமைப்பு எப்போதும் பேசியது இல்லை. சினிமாவில் புதிதாக படம் வாங்கி பாதிப்புக்குள்ளான விநியோகஸ்தரின் புகாரை வாங்குவது இல்லை. அன்புச் செழியன் ஆசி பெற்றவர்கள் நலன் காக்க மட்டுமே இவ்வமைப்பின் செயல்பாடு இருக்கும். தமிழ்ப் படத்தின் தமிழ்நாடு உரிமையை புதியவர்கள் வாங்க முயற்சிக்கும் போது, வாங்குகிற போது, வாங்கியது அறிவிக்கப்படும் போது விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு எதுவும் கூறாது, பட வியாபாரம் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விநியோகஸ்தர் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்ய தொடங்குகிற போது ‘வெடிகுண்டு’ வெடிக்கும்.

“அண்ணே, பெடரேசன் தலைவரை கொஞ்சம் போய் பாருங்கண்ணே, ஏதோ பிரச்சினை இருக்காம், விநியோகஸ்தர் சங்கம் நம்ம படத்துக்கு தியேட்டர் கொடுக்கும் முன் சங்கத்தை அணுகவும் என்று கூறுகின்றனர்” என தயாரிப்பாளருக்கு விநியோகஸ்தரிடம் இருந்து அழைப்பு வரும்.

தலைவரை தொடர்பு கொண்டால், “முந்தைய படத்தை ரிலீஸ் செய்த போது விநியோகஸ்தரிடம் வாங்கிய அட்வான்ஸ் பாக்கி, வேறு ஏதாவது பைனான்சியரிடம் கடன் வாங்கி இருந்தால் அதனை வட்டியும் முதலுமாக செலுத்தி விடுங்கள்” என்பார்.

ஏற்கெனவே சிரமத்தில் அல்லது நஷ்டத்தில் படத்தை முடித்து வெளியிடத் தயாராகும் தயாரிப்பாளரை நம்பி படம் வாங்கிய விநியோகஸ்தர் சம்மன் இல்லாமல் கூட்டமைப்பு தலைவரை போய் பார்க்க வேண்டிய நிலையை கூட்டமைப்பு நாட்டாமைகள் மறைமுகமாக இப்படித்தான் ஏற்படுத்துவார்கள்.

‘புத்திசாலி’ விநியோகஸ்தர், அல்லது ஏற்கெனவே அனுபவபட்டவர்கள் உற்சவரிடம் தனிப்பட்ட முறையில் பேரம் பேசி உற்சாகப்படுத்தி விட்டால் செய்கூலி சேதாரம் இல்லாமல் தப்பித்து விடலாம். அவ்வாறு செய்யாமல் நான் எந்த பாக்கியும் யாருக்கும் கொடுக்க வேண்டியது இல்லை என்பவர்கள். குறைந்தபட்ச பாக்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அல்லது அவர்களிடம் படம் வாங்கியவர்கள் சினிமா தொழிலே வேண்டாம் என்கிற அளவுக்கு மறைமுக தாக்குதலை தொடங்கி முடிப்பார்கள்.

அது என்ன மாதிரியான தாக்குதல் என்பதை நாளை பார்க்கலாம்..

குறிப்பு : இத் தொடர் சம்பந்தமாக தங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

ஆசிரியர் குறிப்பு

இராமானுஜம் : கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் விவரங்களை வெளியிட்டு வந்த வணிகப் பத்திரிகையான ‘தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட்’ மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.

முந்தைய கட்டுரை - தமிழ் சினிமா நாட்டாமைகளுக்கு வந்த நெருக்கடி!

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon