மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்!

டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்!

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும்படி சந்திரபாபு நாயுடு இன்று டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்.

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, இந்தப் பிரிவினால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டுவதற்காக ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு, சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. அதன்பின் 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலத்தைக் கடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் அலுவலகத்துக்குப் பலமுறை கடிதம் எழுதிவிட்டார்.

ஆந்திரத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு தங்களுக்கு உதவி செய்யவில்லை என்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி கடந்த ஆண்டு வெளியேறியது. அதன்பின்னர் மோடிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து தோல்வியும் அடைந்தது. அதன்பின் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின்போது ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி ஆந்திர எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்து இன்று டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் நடத்தவுள்ளார். டெல்லியிலுள்ள ஆந்திர பவனில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் ஆந்திர மாநில அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர்கள், ஆந்திர மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon