மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

சாதி மறுப்புத் திருமணம்: பிரத்யேக விடுதி!

சாதி மறுப்புத் திருமணம்: பிரத்யேக விடுதி!

திருச்சியில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்குத் தனியாக விடுதியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணத்தால் பல ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன. இதைத் தடுப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு உதவ 24 மணி நேர உதவி மையமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சியில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்காக விடுதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஆதலால் காதல் செய்வீர் என்ற அமைப்பு திருச்சியிலுள்ள அண்ணா நகர் போலீஸ் காலனியில் இந்த விடுதியை அமைத்துள்ளது. 345 சதுர அடியில் ரூ.10 லட்சம் செலவில் இது கட்டப்பட்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குணசேகர் கூறுகையில், சாதி மறுப்புத் திருமணம் செய்தபின்னர் பாதுகாப்பான இடம் இல்லாமல் இருப்பவர்களுக்காக இது கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

“காவல் நிலையங்களுக்குச் சென்றாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அங்கு இருக்க முடியாது. அதனால்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இங்கு வருபவர்களுக்குப் பாதுகாப்பான தங்கும் இடம் மற்றும் சட்ட உதவி வழங்கப்படும். விடுதிக்கு அங்கீகாரம் கோரி மாவட்ட சமூக நலத் துறைக்கு விண்ணப்பித்துள்ளோம். விரைவில் அது கிடைத்துவிடும். இது போன்று மற்ற மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டால் சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பாக அமையும்” என்று குணசேகர் கூறினார்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon