மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 பிப் 2019

நுகர்வுக்கும் பேரழிவுக்கும் என்ன தொடர்பு?

நுகர்வுக்கும் பேரழிவுக்கும் என்ன தொடர்பு?

கதவைத் தட்டும் பேரழிவு: பொருள்களை வாங்கிக் குவிப்பதின் விளைவு என்ன?

நரேஷ்

“வெப்பத்தை நீராலதாங்க அணைக்க முடியும். இதைவிடவா உங்களுக்கு பெரிய விளக்கம் தேவைப்படுது?” என்று எளிமையாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார் இயற்கை விவசாயி ஞானப்பிரகாசம்.

எளிமையாகத்தான் இருக்கிறது. ஆனால், நவீன முறையியலுக்கு எளிமை என்பது தெரியாது. அதற்குச் சான்றுகளும், விளக்கங்களும், ஆதாரங்களும் தேவை. அவை ஏனோ தீர்வுகளைத் தொடுவதேயில்லை. விவாதங்களுடன் நின்றுவிடுகின்றன.

தீர்வுகள் மிகவும் எளிமையானவை. அவை விளக்கங்களில் இல்லை, செயல்பாட்டில் இருக்கின்றன.

மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் இருக்கும் அழகிய கிராமத்தில் வெறும் ஒரு ஏக்கர் நிலத்தில் முழுமையான இயற்கை விவசாய மாதிரியை வடிவமைத்திருக்கிறார் அவர். அவரின் இயற்கை குறித்த புரிதல் அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கியது.

“சூரியன்ல இருந்து வர்ற வெப்பத்தை நிலத்துக்கு மேல இருக்கும் நீர்நிலைகள் தாங்குது. பூமியின் மையத்தில் இருந்து வர்ற வெப்பத்தை நிலத்தடி நீரும் கடலும் தாங்குது. நீர் தங்குற நிலத்துல வெப்பம் இருக்காது. அந்த நீர் வெப்பத்தை எடுத்து ஆவியாகி, காற்று மண்டலத்துல நீராவியா சுத்திட்டு இருக்கும். இதுக்கு நீங்க பெருசா பரிசோதனை பண்ணிப் பாக்கறீங்க. நான் என்ன சொல்லுறேன், ஒரு குளமோ ஏரியோ நிரம்பியிருக்கு ஊரு பக்கம் போயி பாருங்கங்குறேன். அங்க வீசுற காத்துக்கும், நீர் நிலை இல்லாத ஊரில் வீசுற காத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உங்க தோலே காட்டிக்கொடுத்திரும்” என்றார்.

“சரி, புவி வெப்பமயமாதலுக்கு தீர்வு சொல்லுறேன்னு சொன்னீங்க..”

“இதுக்கு மேல என்னத்த சொல்லுறது தம்பி? நிலத்துக்கு அடியில இருக்க நீரை உறிஞ்சாதீங்க. நிலத்துக்கு மேல இருக்கு நீரைக் கெடுக்காதீங்க. அவ்வளவுதான் தீர்வு..!”

எந்தத் தொழில்நுட்பத்தாலும் இதைவிட எளிமையான தீர்வை வழங்கிவிட முடியாது. ஆனால், நவீன வாழ்க்கைமுறையால் நீரைச் சுரண்டாமல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழும் அல்லவா..?

“உலகத்துல பொறந்த எல்லா மனுஷனுக்கும் பூமியில தண்ணி இருக்கு. இனி பொறக்கபோற கோடானு கோடி பேருக்கும் பூமி தண்ணி கொடுக்கும். ஆனா நீங்க உங்க சுகத்துக்கு பயன்படுத்துறக்கு பூமி கிட்ட தண்ணி இல்ல தம்பி. இன்னைக்கு தண்ணீரை பயன்படுத்தாம தயாரிக்கப்படுற பொருள்னு எதுவுமே இல்ல. ஒரு சொட்டு தண்ணீரைக்கூட பயன்படுத்தாம உற்பத்தியாகுற பொருள்னு இங்க எதுவுமே இல்ல தம்பி.”

அறிவியல் தரவுகளும் ‘ஆம்’ என்கின்றன. உலகில் உள்ள ஒட்டுமொத்த மனிதர்கள் உபயோகப்படுத்தும் நீரைவிட, 40 மடங்கு அதிக நீர் தொழில் உற்பத்திக்கு உறிஞ்சப்படுகிறது! அப்படியென்றால், அடுத்த 4 தலைமுறைக்கான நீரை நாம் தொழில் உற்பத்திக்காகப் பயன்படுத்திவருகிறோம்.

“நான் ஒண்ணும் அவ்வளவு தண்ணிய உறுஞ்சல. அளவாத்தான் பயன்படுத்துறேன்னு குற்றமற்றவரா ஒருத்தர்கூட தப்பிக்க முடியாது தம்பி. ஏன்னா, இந்த நவீன மனிதர்கள் நேரடியா சுரண்டல்ல ஈடுபடுல அவ்வளவுதான். அவங்க உடுத்துற உடையில இருந்து, சாப்பிடுற சாப்பாட்டு தட்டு வரைக்கும் தண்ணீரை உபயோகப்படுத்தி வீணாக்கித்தான் தயாரிக்கப்படுது. இந்த உற்பத்திக் கூட்டத்துல சிக்கி, பொருள வாங்கிக் குவிக்கிறது உங்களையும் உங்க பொருளாதாரத்தையும் மட்டும்தான் சீரழிக்கும்னுன் நினைக்காதீங்க. அது ஒட்டுமொத்த பூமியையும் சேத்துதான் சீரழிக்குது..”

நாம் தண்ணீர் பருக ஒரு லிட்டர் பாட்டிலை வாங்கினால்கூட, அந்த பாட்டிலை உற்பத்தி செய்ய 3 லிட்டர் நீர் செலவுசெய்யப்படுகிறது. நீர்நிலைகளைக் காப்பதைவிட மிகமுக்கியமானது நுகர்வைக் குறைப்பது. நுகர்வு என்பதை அனைத்து தளங்களிலும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தேவைக்கதிகமாகப் பருகும் ஒரு கவளம் சோற்றை உற்பத்தி செய்வதற்குகூட ஒரு கேலன் நீர் செலவு செய்யப்படுகிறது.

நாம் நீர்நிலைகளைக் காக்க வேண்டும். அதே நேரத்தில் நுகர்வின் பிடியில் சிக்கிக்கொண்டே, மீட்பைப் பற்றிப் பேசுவது என்பது ‘மரங்களைக் காப்போம்’ என்று காகிதத்தில் அச்சடித்து விநியோகிப்பதைப் போன்றது.

இயற்கையின் பாடங்கள் தொடரும்...

இதைவிட எளிமையாக ஆபத்தை உணர்த்த முடியாது!

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

திங்கள் 11 பிப் 2019