மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

புதுச்சேரி: இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்!

புதுச்சேரி: இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்!வெற்றிநடை போடும் தமிழகம்

இன்று முதல் புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சாலைகளில் அது முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்று மேற்பார்வையிட்டார் அம்மாநிலத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.

கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு அதிகளவில் எழுந்ததால் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அங்கு விபத்துகளில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனை ஆய்வு செய்ததில் ஹெல்மெட் அணியாததால் பலியானவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. இதனால், மீண்டும் அங்கு ஹெல்மெட் கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டது.

கடந்த 9ஆம் தேதியன்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சுந்தரி நந்தா, “கடந்த மூன்று ஆண்டுகளில் புதுச்சேரியில் விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை 648. அதில் ஹெல்மெட் அணியாததால் பலியானவர்களின் எண்ணிக்கை 322. இதனால் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுகிறது. அவ்வாறு அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்று முறை இவ்வாறு ஹெல்மெட் அணியாமல் சென்றால், சம்பந்தப்பட்டவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். இதேபோல காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம்” என்று தெரிவித்தார்.

நேற்று (பிப்ரவரி 10) காலையில் புதுச்சேரியில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டார் கிரண் பேடி. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களைத் தடுத்துக் கேள்வி எழுப்பினார். சிலர், அவரிடம் இன்றே ஹெல்மெட் வாங்குவதாகக் கூறிச் சென்றனர். ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்ததையும் கண்டித்தார் கிரண் பேடி. கூடுதலாகப் பயணிகளை ஏற்றிவந்த ஆட்டோ ஓட்டுநர்களையும் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கினார்.

ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடம் அதனை அணியுமாறு வலியுறுத்த வேண்டுமென்றும், உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தியிருந்தார். இதனைக் கண்டித்த கிரண் பேடி, இந்த விவகாரத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரி முழுவதுமே இன்று போக்குவரத்து போலீசார் மைக்கில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை விளக்கினர். இதனை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்த சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon