மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

எல்லோருக்கும் எதிர்காலம் உண்டு!

கடந்த காலமும் எதிர்காலமும் எல்லோருக்கும் உண்டு என்பதை உணர்ந்தவர்கள், மற்றவர் குறித்துக் குறை சொல்வதில்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் யாரேனும் ஒரு புதிய நபரை அல்லது தமக்குத் தொடர்பில்லாதவரைக் குறிப்பிடும்போது, அவரது கடந்த காலம் குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொள்வர். ”இப்ப நல்லவராக இருந்தாலும், ஒருகாலத்தில் எல்லா மோசமான பழக்கங்களும் அவரிடத்தில் உண்டு” என்று சொல்வதில் சிலருக்கு மகிழ்ச்சி. அப்படி இல்லையென்றால், எவ்வளவு நல்ல மனிதர் இப்படித் தீயவராக மாறிவிட்டாரே என்று வருத்தம் பெருகும்.

அதே நேரத்தில், கடந்த காலத்தை வைத்து நம்மை யாராவது அடையாளப்படுத்தினால் ஏற்றுக்கொள்ளாமல் பொறுமுவோம். இப்போது நான் பல தவறுகளைச் சரி செய்துவிட்டேன் என்றோ, அது அறியாத காலத்தில் செய்த தவறு என்றோ பதில் சொல்லத் தயாராக இருப்போம்.

எப்போதுமே கடந்த காலம் என்பது பாவ மன்னிப்புக்கானது; அது குறித்த ஒப்புதல் வாக்குமூலங்கள் எல்லாமே வரலாற்றுக் குறிப்புகள். இப்படித்தான் நம்மில் பலர் கருதுகின்றனர். வாழ்க்கை வரலாறு கூறும் பிரபலங்கள்கூட, சமீபகாலத் தவறுகள் குறித்து ஒரு சதவிகிதம்கூடப் பேசத் தயாராக இருப்பதில்லை.

ஆங்கிலப் பழமொழி ஒன்று இதனை எளிதாக விளக்குகிறது. “எல்லாத் துறவியர்க்கும் கடந்த காலம் என்ற ஒன்று இருக்கிறது; எல்லாக் குற்றவாளிகளுக்கும் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறது” என்பதே அது. இப்போது நல்லவராக இருப்பவரின் கடந்த காலத்தையும், தீயவராக இருப்பவரின் எதிர்காலத்தையும் நினைத்துப்பார்க்கும் பக்குவம் வாய்த்தால், எந்தவொரு மனிதரையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய தேவையில்லை. இதனைப் புரிந்துகொண்டவர்கள் மற்றவர்களின் கடந்த காலத் தவறுகளைப் பொருட்படுத்துவதில்லை.

இன்றைய தவறுகள் என்றோ ஒருநாள் சரி செய்யப்படும் என்பவர்கள், அடுத்தவரின் தவறுகளை நினைக்கும்போது எதிர்காலத்தை மட்டுமே கவனத்தில் கொள்வர். இதனை விளக்கும் எளிய கதை ஒன்று உள்ளது.

தனது திறமை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டிருந்தான் ஒரு திருடன். மற்றவரை ஏமாற்றித் திருடும்போதெல்லாம், தன்னைத்தானே மெச்சிக்கொண்டான். அதேநேரத்தில், திருடும்போது மாட்டிக்கொண்டால் தனது ஏழ்மையைச் சொல்லித் தப்பிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தான். தன்னால் மற்றவர்கள் அடையும் துன்பம் குறித்தோ, தன் மீது யாராவது ஒருவர் அக்கறை கொள்வர் என்பது குறித்தோ, அவன் ஒருநாளும் யோசித்ததில்லை.

ஒருமுறை அவன் துறவி ஒருவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றான். அவரோ, நடுஇரவிலும் தியானம் மேற்கொண்டிருந்தார். அவர் தனது தியானத்திலிருந்து வெளிவரத் தாமதமாகும் என்பதையும் அறிந்து வைத்திருந்தான். மிக நுட்பமாகத் திருட வேண்டுமென்று பூனை போல நடந்து, மெதுவாக அங்கிருந்த பெட்டியொன்றை நகர்த்தி, அதனை பவ்யமாகத் திறந்து, அதனுள் இருந்த பணத்தை எடுத்தான். தனது திறமையின் மீது நம்பிக்கை கொண்டு, அங்கிருந்து கிளம்ப யத்தனித்தபோது அந்த குரல் ஒலித்தது.

“நாளை ஒருவர் என்னிடம் உதவி கேட்டு வருவார். அவருக்கு அதில் பாதியைத் தருவதாக வாக்களித்துள்ளேன். மீதியை உனக்காக எடுத்துக்கொள்” என்று கூறினார் துறவி. கண் திறக்காமல் அவர் கூறியதைக் கேட்டதும் திருடன் விக்கித்துப் போனான். “கவலைப்படாதே, நீ யார் என்று எனக்குத் தெரியாது. என் சீடர்கள் வருவதற்குள் இங்கிருந்து வெளியேறிவிடு. உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்றார். அவர் சொன்னவாறே செய்தான் அந்த திருடன். தனது கடந்த காலத்தை அந்த துறவி கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை என்பது அவனுக்கு வியப்பைத் தந்தது.

அடுத்த சில நாட்கள், தனது வாழ்நாள் முழுக்கச் செய்த தவறுகளைச் சரி செய்யும் விதமாக, தன் கையில் உள்ள பணம் அனைத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்குமாறு செய்தான். சில நாட்கள் கழித்து, அந்த துறவியைச் சந்திக்கச் சென்றான். அவனை எதுவும் பேசவிடாமல் தடுத்து, தனது சீடனாக்கிக் கொண்டார் அந்த துறவி.

திருடன் மனம் திருந்தியது இங்கு பெரிதல்ல. அவன் என்றோ ஒருநாள் மனம் திரும்புவான் என்றெண்ணிய அந்த துறவியின் மனப்பாங்கே இங்கு போற்றத்தகுந்தது. இப்படித்தான் நாம் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொள்கின்றனர் நம் சுற்றத்தினர். இதனை உணர்ந்து தெளிவதே சிறந்தது. மாறாக, தமது தவறுகளைச் சகித்துக்கொள்வதே சுற்றத்தினரின் கடமை என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறில்லை.

ஏனென்றால், நிகழ்காலம் என்பது அடுத்த கணமே கடந்த காலமாக ஆவதுதான்.

-உதய்

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது