மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 10 பிப் 2019

இதைவிட எளிமையாக ஆபத்தை உணர்த்த முடியாது!

இதைவிட எளிமையாக ஆபத்தை உணர்த்த முடியாது!

கதவைத் தட்டும் பேரழிவு: தீர்வு எங்கே உள்ளது?

நரேஷ்

பிரச்சினைகள் எவ்வளவு வலுவானவையாக இருந்தாலும், தீர்வுகள் என்றும் எளிமையானவைதான். இயற்கையும் எளிமையானதுதான். அந்த எளிமையைப் புரிந்துகொள்ள முடியாமல் முட்டி மோதும் இடத்தில்தான் முரண் தொடங்குகிறது.

பசுமைப் புரட்சியும், நஞ்சான உணவும் நிலமும் நீரும் மிகப் பெரிய பிரச்சினைகள்தான். ஆனால் அவற்றின் தீர்வு மிக எளிமையானது. அந்த எளிமையைப் புரியவைப்பதுதான் கடினமான வேலை. அதைச் சிறப்பாகச் செய்தவர்களுள் ஒருவர் நம்மாழ்வார்.

உரங்களை வெறும் உப்புதான் என்றார் அவர். ‘கருவாட்டுல உப்பு போடுறது நுண்ணுயிரிகள் உற்பத்தியாகாம இருக்கத்தான். அதையே நிலத்துல போட்டா நிலத்துலையும் நுண்ணுயிரிகள் உற்பத்தியாகாதுதானயா. வெறும் உப்பத் தின்னு செடி நெடு நெடுனு வளர்ந்தாலும் அதுல என்னையா நுண்ணூட்டம் இருக்கப்போகுது’ என்று பாமர மொழியில் பேசினார் அவர்.

அந்த எளிமைதான் இன்று இயற்கை விவசாயமும் நஞ்சில்லா உணவும் இவ்வளவு பெரிய விழிப்புணர்வைப் பெற்றிருப்பதற்கான காரணம். பிரச்சினைகளை புரியவைப்பதுதான் தீர்வை நோக்கிச் செல்வதற்கான முதல் படி.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் மக்களுக்குப் புரியாத மொழிகளிலேயே பேசப்படுகின்றன. புவி வெப்பமயமாதல், பசுமை இல்ல வாயுக்கள், வெப்பச் சலனக் கதிர்வீச்சு என்று என்னதான் தமிழ்ப்படுத்தினாலும் சாதாரண மக்களுக்கு அவை அந்நியமானவைதான். இந்தச் சூழல் பிரச்சினைகளை சாதாரண மொழியில் புரியவைக்க வேண்டியது சூழலியல் செயற்பாட்டாளர்களின் தலையாய கடமை.

அவற்றுக்காக நாம் பெரிதாகப் படிக்க வேண்டியதில்லை. எளிமையான மனிதர்களின் செயல்களைக் கவனிப்பதும், காது கொடுத்துக் கேட்பதும் போதும். புவி வெப்பமயமாதலுக்கும் நிலத்தடி நீரை நாம் உறிஞ்சுவதற்கும் உள்ள தொடர்பினை மிகவும் எளிமையாக ஒரு விவசாயி விளக்கினார். அது அவ்வளவு எளிமையாக இருந்தது. அவ்வளவு உண்மையாக இருந்தது. அதுதான் இன்றைய தேவை.

“ஒரு சோத்துப் பானை எடுத்துக்கங்க. அதுல தண்ணி ஊத்தி அரிசி போட்டு கொதிக்க வெக்கிறீங்க.. அப்போ என்ன ஆகுது? தண்ணி சூடாகி ஆவியாகிடும். அந்த நீரோட பதத்தை உறிஞ்சி அரிசி வெந்துவரும். இப்போ அரிசிக்குப் பதிலா மண்ணும் தண்ணியும் ஊத்தி கொதிக்கவெச்சா, தண்ணி ஆவியாகி மண்ணு மட்டும் இருக்கும். இப்போ தண்ணியே ஊத்தாம, மண்ணை மட்டும் கொட்டி சட்டிய சூடு பண்ணா என்ன ஆகும்? மண்ணு கொதிச்சுப் போயிடும்..” என்றார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விவசாயி ஞானப்பிரகாசம்.

இதுக்கும் புவி வெப்பமயமாதலுக்கும் என்ன சம்பந்தம்..?

“என்ன தம்பி..? இன்னும் புரியலையா. அந்த சோத்துசட்டிதான் நம்ம பூமி. பூமியோட மையத்துல கொதிச்சிட்டுகிற வெப்பம்தான் அடுப்பு. நிலம்தான் மண்ணு. நிலத்துக்கு அடில இருக்க நீரை நாம தொடர்ந்து எடுத்துட்டே இருக்கோம். இப்போ நிலத்துக்கு அடியில நீரே இல்லாம போகுது. அப்போ பூமியோட மையத்துல இருந்து வர்ற வெப்பத்துனால மண்ணு சூடாகி வெப்பத்தைக் கக்குது. காத்து அந்த மண்ணுல இருந்து வர்ற வெப்பத்தை எடுத்துட்டு சூடாகுது.”

“நிலத்துக்கு அடியில நீர்தான், பூமியோட மையத்துல இருந்து வெப்பம் நிலத்தை நேரடியா தாக்காம பாதுகாத்தது. பூமியில இருந்து வர்ற வெப்பத்துல ஆவியாகி காத்தோட ஈரப் பதத்துல கலக்கும். இல்ல மண்ணோட கலந்து வெப்பத்தைச் சீரா வெச்சிக்கும். நம்ம தண்ணிய பூரா உறிஞ்சு எடுத்துட்டோம்னா, மண்ணு மட்டும்தான் சூடாகும். அந்த வெப்பம் புவியிலையும் காத்துலையும்தான பரவும்..?” என்று கேட்டார்.

பேசிவிட்டு வந்து அறிவியல் தரவுகளைச் சோதித்துப் பார்த்தபோது சரியாக இருந்தது. சூரியனிலிருந்து 14.96 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பூமிக்கு, சூரியனிலிருந்து வரும் வெப்பத்தைவிட, பூமியின் நடுப்பகுதியிலிருந்து (Earth core) 6371.393 கிலோமீட்டர் தூரம் மட்டுமே இருக்கும் நிலத்துக்கு வரும் வெப்பம்தான் அதிகம். அந்த வெப்பம் காற்று மண்டலத்தை (atmosphere) தாக்காமல் பார்த்துக்கொள்வது கடலும் நிலத்தடி நீரும்தான். அந்த வெப்பம் முழுமையாக நிலத்தின்மீது செலுத்தப்பட்டால், சோற்றுச்சட்டியில் வேகும் கறியைப் போல நாம் வெந்துவிடுவோம் என்றார்.

ஆபத்தை இதைவிட எளிமையாக விளக்க முடியுமா என்ன?

“நம்ம பயன்படுத்துணும்தான் நிலத்துக்கு மேல ஆறுகளையும், அருவிகளையும், நீர்நிலைகளையும் கொடுத்துவெச்சது இயற்கை. நாம பயன்படுத்தக் கூடாது என்பதாலதான் பூமிக்கு அடியில கண்ணுக்குப் புலப்படாத ஆழத்துல நிலத்தடி நீரை மறைச்சுவெச்சது இயற்கை. வழங்கப்படுறத மதிக்காம, சுரண்டிப் புடுங்குறது தப்பில்லீங்களா..?”

இந்தக் கேள்விக்கு நவீனத்தால் பதில் கொடுக்க முடியுமா?

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

ஞாயிறு 10 பிப் 2019