மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

திமுக கூட்டணியில் கமல் சேர வேண்டும்: கே.எஸ்.அழகிரி

திமுக கூட்டணியில் கமல் சேர வேண்டும்: கே.எஸ்.அழகிரி

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அறிவித்துள்ள அதன் தலைவர் கமல்ஹாசன் திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயாராகி வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கமல்ஹாசனை விமர்சித்து திமுக எம்.எல்.ஏ.வும் நடிகருமான வாகை சந்திரசேகர் அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 9) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “ கமல்ஹாசன் போன்றவர்கள் எங்கள் அணியில் இருந்தால் நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில் கமல்ஹாசன் தன்னை ஒரு இடதுசாரியாகவும் மதச்சார்பற்றவராகவும் காட்டிக்கொண்டு வந்துள்ளார். அவர் தனித்து நின்றால் வாக்குகள் சிதறக்கூடும். எனவே அவரும் வர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்” என்று கமல்ஹாசனை கே.எஸ்.அழகிரி கூட்டணிக்கு அழைத்துள்ளார்.

மேலும், “எங்கள் கூட்டணியில் இன்னும் சிலர் இணைவதற்கு வாய்ப்புள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி அமைப்பது சிரமமான ஒரு காரியமாக இருக்கிறது. அந்தக் கூட்டணி அமைந்தால் கூட வெற்றிகரமான அணியாக இருக்காது. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்துமே உள்ளன, எங்களுடன் இல்லாதவர்கள் பாஜகவும் அதிமுகவும்தான்” என்று தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு அழகிரி இவ்வாறு பேட்டியளித்தார்.

இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன், “அவர் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கூறியிருக்கிறார். திமுக, அதிமுக இரண்டுக்கும் எதிரான கருத்துகளை கமல்ஹாசன் பேசி வருகிறார். அதனை நீர்த்துப் போகச் செய்யும் யுக்தியாக அதனை நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon