மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

தமிழ் சினிமா நாட்டாமைகளுக்கு வந்த நெருக்கடி!

தமிழ் சினிமா நாட்டாமைகளுக்கு வந்த நெருக்கடி!

தமிழ் சினிமா 365: பகுதி - 36

இராமானுஜம்

தொழில் ரீதியாக சில தவறான நடைமுறைகளுக்கு பழகிவிட்டால் அதில் இருந்து மீண்டு வர, திருத்த முயற்சி எடுக்காமல் அதனை நியாயப்படுத்தி, பொது விதியாக்கிவிடுவது மனித இயல்பு. அத்தொழிலில் அடுத்தடுத்து வருபவர்களும் அதனைப் பின்பற்றுவது தமிழ் சினிமாவில் எழுதப்படாத சட்டமாகி விட்டது.

பட்ஜெட் கவராகி விட்டது, லாபம் இல்லை என தயாரிப்பாளரும், படத்தை வாங்குன விலைக்கு தியேட்டரில் எம்.ஜி.போட்டாச்சு ஓவர் ப்ளோ வந்தால் லாபம் கிடைக்கும் என விநியோகஸ்தரும், படத்துக்கு கொடுத்த எம்.ஜி.நிகர (Net) வசூல் ஆகிருக்கு, படம் மேற்கொண்டு ஓடி வசூல் வந்தால் தியேட்டர் வாடகை கிடைக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறுவதும் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர் நடித்த படம் ரிலீசாகும் பொழுது நடைபெறும் உரையாடல்.

இப்படிப்பட்ட உரையாடலின் இறுதியில் இடம்பெறும் தியேட்டர் உரிமையாளர்களின் புலம்பலைக் கேட்க முடியாத சொர்க்க பூமியாக திகழ்வது கோவைத் திரைப்பட விநியோக பகுதி என்கிற சாதனை நிகழ காரணமாக இருந்தவர் திருப்பூர் சுப்பிரமணி. அவர் தான் தென்னிந்திய சினிமா பைனான்சியர்கள் சங்கத்தின் தலைவர்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் அங்கம் வகிக்கும் சங்கங்களில் ஒன்றுக்கு இவர் தலைவர். கோவை ஏரியாவில் பெரும்பான்மை தியேட்டர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவரை மீறி புதிய படங்களின் விநியோக உரிமைகளை எவரும் வாங்குவது எளிதான காரியமல்ல. அப்படி ஒரு அதிசயம் நடக்கும் போது தனக்கு இணையான தொழில் போட்டியாளராக இருந்தால் அனுசரித்து போவது இவரது வாடிக்கை.

சாதாரண ஆட்கள், புதியவர்கள் என்றால் " விலையில்லாமல் என்னிடம் வந்திருக்க கூடிய படத்தை விலை கொடுத்து உன்னை யார் வாங்க சொன்னது" என்று விநியோகஸ்தர்களிடம் இவர் பேசும் டயலாக் கொங்கு மண்டலத்தில் பிரபலமான ஒன்று.

தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் நம்மில் ஒருவர்தான் இருக்க வேண்டும் என்பது திமுக - அதிமுக கட்சிகள் கடைப்பிடித்து வரும் கொள்கை. தட்டு தடுமாறி விஜயகாந்த் போன்றவர்கள் சினிமா பிரபலத்தை பயன்படுத்தி அரசியலில் ஜெயித்து தங்களுக்குப் போட்டியாக வளர்ந்து விடக் கூடாது, அப்படியும் துளிர் விட்டால் அதனை நிர்மூலமாக்கிட திட்டமிட்டு வெளிப்படையாக காரியம் ஆற்றாமல் அவர்களாகவே விலகும் சூழலை உருவாக்குவார்கள்.

அது போன்ற நிலை தான் தமிழ் சினிமா வியாபாரத்தில் எல்லா ஏரியாவும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்குமாறு கட்டிக்காத்து வந்த சிலந்தி வலை பலவீனமடைந்து வருவதை நாட்டாமைகளால் ஏற்க முடியவில்லை.

புது நபர்களும், புதிய நிறுவனங்களும் தயாரிப்பு, விநியோகத் துறையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விட்டனர். இதனை நேரடியாக தடுக்க முடியாது. ஆனால் மறைமுகமாக தொழில் ரீதியாக நெருக்கடிகளை திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு மூலம் ஏற்படுத்தி வந்தார்கள். கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பார்த்த எதுக்கு வம்பு இங்கு இப்படித்தான் அனுசரித்து போய் விடுவோம் என்ற மனநிலைக்கு பலர் வந்து விட்டாலும், முழுமையாக தமிழ் சினிமாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தங்கள் கண் அசைவில் எல்லாம் நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியை கோவை ஏரியாவில் படம் வெளியிட்ட வகையில் கேள்வி கேட்டதன் காரணமாக அவர் தயாரிக்கும் படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பதும் இல்லை, கொடுக்கவிடுவதும்இல்லை.

எங்களை எதிர்கேள்வி கேட்டால் என்ன நடக்கும் என்பதை அரங்கேற்றிய சூத்திரதாரிகள் இணைந்திருக்கும் பைனான்சியர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் பங்களிப்பும் - பாதகமும் நாளை பகல் 1 மணிக்கு

குறிப்பு : இத் தொடர் சம்பந்தமாக தங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

ஆசிரியர் குறிப்பு

இராமானுஜம் : கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் விபரங்களை வெளியிட்டு வந்த வணிகப் பத்திரிகையான " தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட்" மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்,

முந்தைய கட்டுரை - பைனான்சியர்கள் சங்கம் தமிழ் சினிமாவுக்கு வரமா சாபமா?

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon