மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

ரஃபேல் சர்ச்சை: அதிகாரிகள் விளக்கம்!

ரஃபேல் சர்ச்சை: அதிகாரிகள் விளக்கம்!

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக என்.ராம் எழுதிய கட்டுரைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளே விளக்கம் அளித்துள்ளனர்.

ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஈடுபட்டிருக்கும் போதே, பிரதமர் அலுவலகம் சார்பில் தனியாக பிரான்ஸ் அரசுடன் ஓர் இணை பேச்சுவார்த்தை நடந்தது என்பதை, பாதுகாப்புத் துறையின் அப்போதைய செயலாளர் மோகன் குமார், அப்போதைய துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு கைப்பட குறிப்பாக எழுதியதை தி இந்து கட்டுரை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

என்.ராம் எழுதிய இந்தக் கட்டுரையை குறிப்பிட்டு, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தனர். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மிகப்பெரிய விவாதமே நடைபெற்றது.

”ரஃபேல் விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டுமென்று நினைத்திருந்தால், அந்தக் குறிப்பில் அடியில் கூறப்பட்டுள்ள அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரின் பதிலையும் வெளியிட்டிருக்க வேண்டும்.

அதாவது, பிரதமர் அலுவலகமும், பிரான்ஸ் அதிபர் அலுவலகமும் இந்த விவகாரத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதாக தெரிகிறது. துறைச் செயலாளர் இதுகுறித்து பிரதமரின் முதன்மைச் செயலாளரிடம் பேசி தீர்வு காணலாம்’ என்ற மனோகர் பாரிக்கரின் குறிப்பையும் வெளியிட்டிருக்க வேண்டும்” என்று தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஃபேல் விலை குறித்த பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகம் தலையிட்டதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு குறித்துச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளே வாய் திறந்துள்ளனர். முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் மோகன் குமார் ரிபப்ளிக் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “ரஃபேல் ஒப்பந்தத்துக்கான விலை குறித்த பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகம் எந்தத் தலையீடும் செய்யவில்லை.

இது முற்றிலும் பொருளற்றது. இதில் உண்மையில்லை. இந்த ஒப்பந்தத்தில் எங்காவது அனில் அம்பானியின் பெயர் இருந்ததா? குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை ஊதி பெரிதாக்கக்கூடாது.. சில அரசியல் கட்சிகளால்தான் இந்தத் தேவையற்ற சர்ச்சை உருவாகிறது. ரஃபேல் ஒப்பந்தத்தில் என்ன நடந்தது என்பதைத் திரித்துக்கூற ஊடகங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிதறுண்ட பகுதி அது. ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் கூறி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று, ரஃபேல் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு இந்தியத் தரப்பில் தலைமை தாங்கிய ஏர் மார்ஷல் எஸ்.பி.பி.சின்ஹாவும் இந்தச் சர்ச்சை குறித்து வாய் திறந்துள்ளார்.. ஏஎன்ஐ ஊடகத்திடம் அவர் அளித்த பேட்டியில், “ரஃபேல் கொள்முதலில் உண்மையை மறைக்கப் பாதுகாப்பு அமைச்சகம் தீய நோக்கோடு செயல்பட்டதாக நேற்று வெளியிடப்பட்ட கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அந்தக் கட்டுரையில் துணை செயலாளர் (ஏர்-2) எஸ்.கே.ஷர்மா நுழைக்கப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இல்லாதவர். யாருடைய விருப்பத்தின்படி அவர் இதில் நுழைக்கப்பட்டார்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

ரஃபேல்: நிர்மலா விளக்கம், என்.ராம் பதில்- மோடி மௌனம்!

பிரதமர் 30 ஆயிரம் கோடியைத் திருடிவிட்டார்: ராகுல்

ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலக தலையீடு: சிக்கியது ஆதாரம்!

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon