மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

ஓ.பன்னீர் பட்ஜெட்: எடப்பாடி போட்ட சென்சார்!

ஓ.பன்னீர் பட்ஜெட்: எடப்பாடி போட்ட சென்சார்!

தமிழக பட்ஜெட் நேற்று பிப்ரவரி 8 ஆம் தேதி துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் பல்வேறு சலுகைகள், கவர்ச்சித் திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த எதிர்பார்ப்பை பட்ஜெட் ஈடு செய்யவில்லை என்று அதிமுகவினரே கருதுகிறார்கள்.

ஒருலட்சம் பசுமை வீடுகள், விவசாயக் கடனுக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் என்ற சிற்சில அறிவிப்புகளைத் தவிர வேறு எதுவும் குறிப்பான பெரிய அறிவிப்புகள் இல்லை. மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறதே தவிர அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி பட்ஜெட்டில் அவர்களுக்கும் ஏதும் இல்லை.

இதற்கான காரணம் குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த சில தகவல்கள் ஆச்சரியம் அளிப்பவையாக உள்ளன.

“ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தயாரிப்பில் நிதித்துறை அமைச்சக அதிகாரிகளோடு ஈடுபட்டிருந்தாலும் அவ்வப்போது முதல்வரும் பட்ஜெட் பணிகள் எப்படி நடக்கிறது என்பதை தீவிரமாக கண்காணித்தார்.

அந்த வகையில் விவசாயிகள், வணிகர்கள், அரசு ஊழியர்களுக்கான சில முக்கிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டுக்காக தயாரிக்கப்பட்டன. மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு சில புதிய திட்டங்களும் முன் வைக்கப்பட்டன. ஆனால் இதையெல்லாம் பார்த்த முதலமைச்சர் எடப்பாடி, அந்தத் திட்ட அறிவிப்புகள் குறித்த பகுதிகளை பட்ஜெட்டில் இருந்து நீக்கச் சொல்லிவிட்டார். இதெல்லாம் அப்படியே இருக்கட்டும், பிறகு அறிவித்துக் கொள்ளலாம் என்பதுதான் அவரது அட்வைஸ்” என்ற கோட்டை வட்டாரத்தினர் தொடர்ந்தனர்.

“தேர்தல் நேரத்து சலுகைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டால் அதற்கான பெயரில் ஒரு பகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்குப் போய்விடும். இதை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த புதிய அறிவிப்புகள், திட்டங்களை எல்லாம் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தானே அறிவிக்கத் திட்டமிட்டிருக்கிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பல முக்கிய அறிவிப்புகளை அவரே 110 விதியின் கீழ் அறிவிப்பார்.

அதைப் பின்பற்ற முடிவு செய்திருக்கும் எடப்பாடி பட்ஜெட்டில் சில முக்கிய அறிவிப்புகளை இடம்பெறாமல் பார்த்துக் கொண்டு அதை தானே 110 விதி அறிவிப்புகளாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார். இதன் மூலம் அறிவித்தது முதல்வர் என்று ஆகிவிடும், பெயரும் தனக்குக் கிடைக்கும் என்பதே காரணம்.

பட்ஜெட்டில் முதல்வர் செய்த இந்த சென்சார் துணை முதல்வருக்கும் வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால் உத்தரவிட்டது முதல்வர் ஆயிற்றே. அதனால் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டிருக்கிறார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட இருந்த சில கவர்ச்சிகரமான திட்டங்களை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 விதியின்படி அறிவிக்க இருக்கிறார்” என்று முடித்தார்கள்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon