மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

கடவுள்தான் காப்பாற்றணும்: நாகேஸ்வர ராவுக்கு எச்சரிக்கை!

கடவுள்தான் காப்பாற்றணும்: நாகேஸ்வர ராவுக்கு எச்சரிக்கை!

சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் பிப்ரவரி 12ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

பிகாரில் இருக்கும் சிறார் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்முறை வழக்கை சிபிஐ இணை இயக்குநரான ஏ,கே.சர்மா விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது ஏ.கே.சர்மாவை இவ்வழக்கில் இருந்து பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே சிபிஐ இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்ற நாகேஸ்வர ராவ், ஏ,கே.சர்மா உட்பட பல சிபிஐ அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். கடந்த ஜனவரி 17ஆம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கூடுதல் இயக்குநராக சர்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் சர்மாவை மாற்றம் செய்ததாக நாகேஸ்வர ராவுக்கு எதிராக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 7) சர்மாவை மாற்றிய விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 12ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரியான சர்மாவை மாற்றம் செய்தது ஏன்? இது குறித்து, உச்ச நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, உச்ச நீதிமன்ற உத்தரவோடு விளையாடினால் கடவுள் தான் உங்களை (நாகேஸ்வர ராவ்) காப்பாற்ற வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

மேலும், பிகார் சிறார் காப்பக பாலியல் வன்முறை வழக்கை விசாரணை செய்யும் எந்த அதிகாரியையும் பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்ற உத்தரவு அமைச்சரவையின் நியமனக் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டதா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon