மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

இளைய நிலா: பிரேக்-அப் என்னும் பேராசான்!

இளைய நிலா: பிரேக்-அப் என்னும் பேராசான்!

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 11

ஆசிஃபா

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நிகழ்ந்த சம்பவம். நாங்கள் படித்தது அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. ஒருநாள் வகுப்புத் தோழி ஒருத்தியுடன் ரெக்கார்ட் நோட் எடுக்கச் சென்றபோது, அவளது கையைப் பார்க்க நேர்ந்தது. கை முழுவதும் கீறல் கீறலாகத் தழும்புகள். என்னவென்று பார்த்தால், ஒவ்வொரு முறையும் தன் காதலனுடன் சண்டை வந்தால் கையில் ஊசி வைத்துக் கீறிக்கொண்டு தன்னைத் துன்புறுத்திக்கொள்வதாகச் சொன்னாள். எனக்கு அப்போது அது பெரும் ஆச்சரியம்.

அதன் பிறகு ஒருநாள் அவள் பிளேட் வைத்துக் கையைக் கிழித்துக்கொண்டாள். காப்பாற்றிவிட்டார்கள். ஆனால், பிரேக்-அப் ஆகிவிட்டது. வெகுநாட்கள் மிகுந்த வருத்தத்துடன் அழுதுகொண்டே இருந்தாள். அதன் பிறகு, மெல்ல மெல்ல சகஜமாகிவிட்டாள். அதுதான் நான் பார்த்த முதல் பிரேக்-அப்.

அதைத் தொடர்ந்த ஐந்து ஆண்டுகளில், பல காதல்களையும் பிரேக்-அப்களையும் பார்த்தேன். எப்படி வாழ வேண்டும் என்பதைவிட, எப்படி வாழக் கூடாது என்பதை அவை கற்றுக் கொடுத்தன.

பெரும்பாலான உறவுகள், ஈர்ப்பில் தொடங்குகின்றன. சில நாட்களில், மாதங்களில் அந்த ஈர்ப்பு போய்விடுகிறது. புரிதலற்ற உறவுகள் நீடிப்பதில்லை. அவ்வுறவு உடைகிறது. அதைத் தாங்க முடியாமல், தற்கொலை முயற்சிகள், self-mortification எனப்படும் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளுதல் என்று பட்டியல் நீள்கிறது. சில நாட்களில், மீண்டும் ஓர் உறவுக்குத் தயாராகிறோம். இந்த இடைப்பட்ட காலம், அதாவது பிரேக்-அப் முதல் அடுத்த காதல் வரையிலான காலத்தைக் கடப்பதுதான் சவால்.

வாழ்க்கையில் நாம் ஏதாவது ஒன்றைத் தேடிக்கொண்டே இருக்கிறோம். கல்வி, பணம், காதல், உறவு, அன்பு, நிம்மதி என்று தேடல்கள் மாறுபடுகிறது. இதில் காதல் என்பது மட்டும் ‘ஒன்றே ஒன்றாக’ இருக்க வேண்டும் என்று நம்மில் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். காரணம், அதுதான் நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு பிரேக்-அப்பைக் கடக்க நாம் சங்கடப்படுகிறோம். எப்படியாவது காதலின் அந்த நினைவுகளை அழித்துவிட்டால் போதும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இது காதலில் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளின்போதும் தோன்றும். இதை மட்டும் அழித்துவிட்டால் நிம்மதியாக இருக்கலாமே!

Eternal Sunshine of the Spotless Mind என்று ஒரு படம். ஜோஅல் (Joel) க்ளெமெண்டைன் (Clementine) என்ற இரு மாறுபட்ட குணமுடையவர்கள் காதலிக்கிறார்கள். ஜோஅல் அனைத்தையும் தனக்குள்ளாகவே வைத்துக்கொள்கிறான்; அவனுடைய துக்கம், கனவு, காதல் என்ற அனைத்தையும். க்ளெமெண்டைன் நேர் எதிரானவள்; எல்லாவற்றையும் வெளியில் கொட்டித் தீர்ப்பாள், அந்த நொடி தோன்றும் விஷயத்தைச் செய்பவள். என்ன தோன்றுகிறதோ மறு ஆலோசனையின்றிச் செய்துவிடுவாள். அங்கு ஓர் இடத்தில், குறிப்பிட்ட நினைவுகளை அழிக்க உதவுகிறார்கள். க்ளெமெண்டைன் உடனடியாக அங்கு சென்று அவனுடைய நினைவை அழித்துக்கொள்கிறாள். அவனுக்கு அது தெரிய வர, அவனும் அழிக்க தீர்மானிக்கிறான். நினைவுகளை அழிக்கும்போது அவன் என்ன செய்கிறான் என்பதில்தான் கதை நகர்கிறது. ஓர் இடத்தில், அவளுடைய ஒற்றை நினைவையாவது பிடித்துக்கொள்ள அவன் மனம் போராடும். தான் தவறான முடிவை எடுத்ததாக நினைப்பான்.

அதுதான் நிதர்சனம். நம் நினைவுகள்தான் நம் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்கின்றன. ஒரு பிரேக்-அப்தான் அடுத்த உறவில் நமக்கு என்ன தேவை என்பதை உணர்த்துகிறது; அவ்வுறவு நமக்கு என்ன கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறது என்பதைக் காட்டுகிறது; நாம் எப்படி மாறியிருக்கிறோம் என்பதைப் புரிய வைக்கிறது. மிக முக்கியமாக, நாம் என்ன அடிப்படையில் ஒரு காதலைத் தேர்வு செய்கிறோம் என்பதையும், அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதையும் உணர்த்திச் செல்கிறது.

ஒரு பிரேக்-அப்புக்குப் பிறகு, அதிகமான வலி ஏற்படத்தான் செய்யும். ஆனால், அதையும் தாண்டி அந்த உறவில் நீடித்தால், அதைவிட அதிகமான வலியை அனுபவிக்க நேரிடும். சிறிது நாட்களை மட்டும் கடந்துவிட்டால் போதும், நாம் பரிணமித்திருக்கிறோம் என்பது நமக்கே புரியும். மிக முக்கியமாக, எந்த நினைவையும் வெறுக்காதீர்கள். வெறுப்புணர்வு அந்த நினைவை மேலும் வலுப்படுத்தவே செய்யும்.

அனைத்து நினைவுகளுமே நம்மை வளரச் செய்பவைதான். இன்று நாம் இப்படி இருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் நாம் கடந்து வந்த பாதைதான்; அதில் நடந்த நல்லதும் கெட்டதும் சேர்ந்துதான் நாம் இன்று நாமாக இருக்கிறோம்!

நாம் ஏன் தனித்து விடப்படுகிறோம்?

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon