மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 பிப் 2019

பூங்குன்றன் சாட்சியும் ஆணையத்தில் பன்னீர் பதுங்கும் பின்னணியும்!

பூங்குன்றன் சாட்சியும் ஆணையத்தில் பன்னீர் பதுங்கும் பின்னணியும்!

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறி, அது குறித்து விசாரணை நடத்துமாறு வலியுறுத்தி தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வம், இன்று பிப்ரவரி 5 ஆம் தேதி மூன்றாம் முறையாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர் ஆவதைத் தவிர்த்திருக்கிறார்.

பட்ஜெட் காரணங்களைக் காட்டி இன்று ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகமாட்டார் என்று இன்று காலை 7 மணி பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படியே இன்று காலை 11 மணிக்கு ஆறுமுகசாமி ஆணையம் தொடங்கிய நிலையில் ஓ.பன்னீர் விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து ஆணைய வாசலில் செய்தியாளர்களை சந்தித்த ராஜா செந்தூர் பாண்டியன், “திரு. ஓ.பன்னீர் செல்வத்துக்கு இன்று ஆஜராக அனுப்பப்பட்ட சம்மன் அவருக்கு சென்றடையவில்லை என்று ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பலோ மருத்துவர்கள் சாட்சியளிக்க 11ஆம் தேதி அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அன்றுதான் ஓ.பன்னீர் செல்வத்தை எப்போது அழைப்பார்கள் என்று தெரியும். 12ஆம் தேதி ஆஜராவார் என்று நம்புகிறோம்” என்ற ராஜா செந்தூர் பாண்டியன் தொடர்ந்து பேசுகையில்,

“இந்த விசாரணை ஆணையத்தில் திருமதி சசிகலா தாக்கல் செய்த சத்தியப் பிரமாணப் பத்திரத்தில், ‘இந்த ஆணையம் அமைக்கப்பட்டதை வரவேற்கிறேன். மிச்ச சொச்ச சந்தேகங்களுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த ஆணையம் அமையும் என்பதால் வரவேற்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம்.

திருமதி சசிகலா தாக்கல் செய்த அபிடவிட்டில் சொல்லப்பட்ட விஷயங்களில் பலவற்றை பல்வேறு அரசியல் சாட்சிகள் மூலம் உண்மைதான் என்பதை நிரூபித்து வருகிறோம். ஓ.பன்னீர் ஆஜராகும்போது அவரிடமும் விசாரித்து எங்கள் பிரமாணப் பத்திரத்தில் சொன்னவை அனைத்தும் உண்மைதான் என்று நிரூபிப்போம். ஓ.பன்னீர் ஆணையத்துக்கு வருகிற அன்று அனைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்படும்” என்றார்.

ஓ.பன்னீர் வராததற்கு வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஒவ்வொரு சாட்சியையும் நான் குறுக்கு விசாரணை செய்துவிட்டு வெளியே வந்ததும் என்னைப் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் குறுக்கு விசாரணை செய்கிறீர்கள். அதுபோல ஓ.பன்னீர் செல்வம் வருகிற அன்றும் நீங்கள் செய்யும் குறுக்கு விசாரணைக்காக கூட அவர் தவிர்க்கிறாரோ என்னவோ என்பது என் யூகம்” என்ற ராஜா செந்தூர் பாண்டியன் ஆறுமுக சாமி ஆணையத்தின் செக்‌ஷன் பிரிவு மீது சில குறைகளையும் கூறினார்.

“பன்னீர் செல்வம் எப்போது வருகிறார் என்று பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்கிறார்கள். என்னிடம் அதற்கு பதில் இல்லை. இதுபற்றி ஆணையத்தின் செ க்‌ஷனிடம் (அலுவலகம்) கேட்டால் பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். இதுபற்றி ஆணையத்தின் நீதியரசரிடமே எங்களது குறைகளைச் சொல்லியிருக்கிறேன்” என்றார் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.

ஓ.பன்னீர் ஆணையத்தில் ஆஜராவது மேலும் தாமதமாகிக் கொண்டே இருப்பது ஏன் என்பது பற்றி அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது வேறு சில தகவல்கள் கிடைத்தன.

“ ஆறுமுகசாமி ஆணையத்தின் குறுக்கு விசாரணையில் தனக்கு எதிரான பல விஷயங்கள் அம்பலத்துக்கு வரும் என்று கருதுகிறார் ஓ.பன்னீர் செல்வம். இதுவரை பலர் கொடுத்த சாட்சியங்களில் குறிப்பாக ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆணையத்தில் கொடுத்த சாட்சியில் ஓ.பன்னீர் பற்றி பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறாராம். அதுவும் ஜெயலலிதா இறந்தபின், பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது கொடநாடு எஸ்டேட்டில் இருந்த தன் சம்பந்தப்பட்ட ஆவணங்களை எடுக்க மேற்கொண்ட முயற்சி தொடர்பாகவும் பூங்குன்றன் தன் சாட்சியில் சில முக்கிய விவரங்களை சொல்லியிருக்கிறாராம். அவை பன்னீருக்கு முழுக்க முழுக்க எதிரானவையாக அமைந்திருக்கின்றன. அதுபற்றியெல்லாம் தன்னிடம் கேள்விகள் கேட்கப்படுமோ என்றுதான் பன்னீர் பயத்தில் இருக்கிறார். இதோடு வேறு பல விஷயங்களிலும் சசிகலா தரப்பின் குறுக்கு விசாரணையில் சரமாரியாக வீசப்படும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பது மிகவும் கடினமாகவே இருக்கும்.

இந்தப் பின்னணியில் ஆணையத்தை வரும் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் அதற்குள் விசாரணையை முடிக்க முடியாது. அப்பல்லோ சார்பில் ஆணையத்தில் மருத்துவர்களை விசாரிக்க, மருத்துவ நிபுணர்கள் குழு வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். அங்கே ஆணையத்துக்கு ஒருவேளை இடைக்கால தடை விதிக்கப்படும் பட்சத்தில் பன்னீருக்கு ஒரு தற்காலிக இடைவேளை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்” என்கிறார்கள்.

ஆனால் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனோ, “ஆணையம் ஓ.பன்னீர் செல்வத்தை அழைக்க தாமதமாவது வருந்தத்தக்கது. ஒருவேளை ஓ.பன்னீர் ஆணையத்தால் அழைக்கப்படவில்லை என்றால் எங்களின் சாட்சிகளில் ஒருவராக ஓ.பன்னீர்செல்வத்தை அழைப்போம். அப்போது எங்கள் விசாரணையில் இருந்து அவர் தப்ப முடியாது” என்று இன்று ஆணைய வாசலில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

செவ்வாய் 5 பிப் 2019