மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

இளையராஜா 75: தவிர்த்துவிட்ட தருணங்கள்!

இளையராஜா 75: தவிர்த்துவிட்ட தருணங்கள்!

இராமானுஜம்

தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு நடத்திய பாராட்டு விழாவுக்கு யாரை எல்லாம் அழைக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் யாரை அழைக்கக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினார் என்கின்றனர் விழா நடத்தியவர்கள்.

இளையராஜாவின் 42 ஆண்டு கால திரை இசைப் பயணத்தில் தவிர்க்க முடியாத ஆளுமைகள் அவரது சகோதரர் கங்கை அமரன், அவருடைய மண்ணின் மைந்தர்கள் இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர் வைரமுத்து.

திரைப்படத்துக்கு இசை எப்படி முக்கியமோ அது போன்று அதில் இடம்பெற்ற பாடல்களுக்குத் தங்கள் குரல் மூலம் உயிர் கொடுத்தவர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி உள்ளிட்டோர். இவர்கள் அனைவரையும் இளையராஜா 75 நிகழ்வில் தவிர்த்துவிட்டார்கள்.

வைரமுத்துவுக்கும் ராஜாவுக்கும் நடைபெற்ற வாக்குவாதமே இன்று வரை அவர்களது பிரிவைத் தொடரச் செய்கிறது. இதனைச் சரிசெய்ய அவர்களது நலம் விரும்பிகள் பலமுயற்சிகளை மேற்கொண்டும் அதற்கு ராஜா உடன்படாததால் இணைப்பு நடக்கவில்லை. வைரமுத்து இளையராஜாவுடன் இணைந்து செய்த பங்களிப்பு காலம் கடந்தும் ரசிகனை பரவசப்படுத்தக்கூடியது.

இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிகளின் குவியலாக இருப்பவர். எளிதில் உணர்ச்சிவசப்படும் சுபாவம் கொண்டவர். அன்னக்கொடியும் கொடிவீரனும் பட விழாவில் நண்பன் என்ற உரிமையில் ராஜாவை ஒருமையில் திட்டிய காரணத்தால் இருவரும் இரு துருவங்களாகவே இன்று உள்ளனர்.

இளையராஜாவின் இசைப் பயணத்தில் அவர் அதிகப் படங்களை ஒப்புக் கொண்ட காலங்களில் அனைத்துத் தயாரிப்பாளர்களின் படங்களும் தாமதமாகாமல் இசைக்கோர்ப்பு நடைபெறப் பின் பலமாக இருந்தவர் அவரது சகோதரர் கங்கை அமரன். குடும்பப் பிரச்சினை இவர்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தியது.

இளையராஜாவுக்கு விழா எடுத்தவர்கள் அவரது திரைப்பயணத்தில் பிரதான பங்களிப்பு செய்தவர்களும் கலந்துகொள்ளும் வகையில் இரு தரப்புடனும் பேசி ஒற்றுமைப்படுத்தி குதூகலமான விழாவாக நடத்தியிருந்தால் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பெருமைக்குரிய விழாவாக ‘இளையராஜா 75’ நிகழ்ச்சி பதிவாகியிருக்கும்.

இளையராஜா 75: கரை சேர்த்த கமல்

இளையராஜாவின் செயற்கை மறதி!

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon