மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

விசிக கூட்டணி பேச்சுவார்த்தை: திருமாவளவனுக்கு அதிகாரம்!

விசிக கூட்டணி பேச்சுவார்த்தை: திருமாவளவனுக்கு அதிகாரம்!

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முழு அதிகாரத்தையும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு அளிப்பதாக அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகரிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் அதன் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று (பிப்ரவரி 4) நடைபெற்றது. விசிக பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன், துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 27ஆம் தேதி திருச்சியில் நடந்த தேசம் காப்போம் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்குக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதேபோல் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் திருமாவளவனுக்கு முழு அதிகாரம் வழங்குவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக விசிக சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ரவிக்குமார், சிந்தனை செல்வன், வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி, கவுதமசன்னா உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இறுதி செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.

மத்திய அரசை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவளிப்பது எனவும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், ஆனந்த் டெல்டும்டே மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப்பெற வேண்டுமெனவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டுமெனவும், அவர் முடிவெடுக்கும் வரை ஏழு பேரையும் பரோலில் அனுப்ப வேண்டுமெனவும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon