மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

“மொத்த லே அவுட்டும் நம்ம கையிலதான்!”

“மொத்த லே அவுட்டும் நம்ம கையிலதான்!”

புதிய நிதிக் கதைகள் 14 – முருகேஷ் பாபு

செல்வமணி என்ற எண்ணுக்கு 17ஆவது தடவையாக டயல் செய்தான் ராஜ்குமார். 17ஆவது தடவையும் செல்வமணி எடுக்கவில்லை. தன்னுடைய மேஜை டிராயரைத் திறந்து அதிலிருந்த விசிட்டிங் கார்டு ஃபோல்டரை எடுத்தான். அதைப் புரட்டிக்கொண்டே வந்தவன் சத்யசாய் ரியல் எஸ்டேட் என்ற கார்டை எடுத்து அதிலிருந்த லேண்ட்லைன் நம்பருக்கும் முயற்சி செய்தான். அதுவும் ரிங் போய்க்கொண்டே இருந்தது.

ராஜ்குமாருக்குக் கலக்கமாக இருந்தது. இரண்டாடுக்கு முன் தேடி தேடி வந்து தேனொழுகப் பேசிய செல்வமணிக்கு இப்போது என்னவானது? களைப்போடு சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான். எதிர் சோபாவில் அமர்ந்து செல்வமணி கதை கதையாகப் பேசிய காலம் எல்லாம் நினைவில் வந்து போனது.

“அண்ணாச்சி, எனக்குப் பொய் பேச வராது. பத்து ரூபா டீ குடிக்க கொடுங்கன்னு கேட்டு வாங்குவேனே தவிர, ஒரு ரூபா ஏமாத்த மாட்டேன். இப்போ நான் சொல்ல போற இடம் பொட்டல் காடு. ஆனா, அங்கிருந்து ஒரு கிலோமீட்டர்ல பஸ் ஸ்டாண்டு வரப் போகுதுனு சொல்றாங்க. அது மட்டும் வந்துட்டா... உங்க இடத்தோட மதிப்பே வேற...” - சொல்லிவிட்டு ராஜ்குமார் மனைவி கொடுத்த தண்ணீரைக் குடித்தான் செல்வமணி.

ராஜ்குமார் சின்னச் சிரிப்போடு செல்வமணியைப் பார்த்தான். “இன்னும் இடமே தெரியல... அதுக்குள்ள உங்க இடம்னு உரிமையா சொல்றியே…” என்றான்.

“ஆமா அண்ணாச்சி... இந்த இடத்தைப் பத்தி என் காதுல விழிந்ததுமே உங்களுக்கு ஒரு ப்ளாட் முடிச்சிடணும்னு மனசுல விழுந்திருச்சு... நல்ல இடம் அண்ணாச்சி... யோசிக்காதீங்க...”

“அதுக்கில்லப்பா, ஏற்கனவே வர சம்பளம் உன்ன புடி, என்ன புடினு போகுது. அடுத்தால ஏதாவது வந்தா பாப்போம்” - பேச்சை முடித்துக்கொள்ளும் பாவனையில் சோபாவை விட்டு எழுந்தான் ராஜ்குமார்.

ஆனால், செல்வமணி சோபாவை விட்டு அசைவதாக இல்லை. “இப்ப உங்க கிட்ட யாரு ரூபா கேட்டா? எத்தனை ப்ளாட்னு மட்டும் சொல்லுங்க... ப்ளாட்டுக்கு ஆயிர ரூபா மேனிக்கு மாசா மாசம் நான் வந்து வங்கிட்டு போறேன். ரெண்டே வருஷத்துல உங்க பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிடலாம்” என்று கொக்கியைப் போட்டான் செல்வமணி.

ப்ளாட் வங்கும் யோசனையே இல்லை என்றாலும், மாதா மாதம் பணம் கட்டலாம் என்று செல்வமணி சொன்ன டீலிங் அவனுக்குப் பிடித்திருந்தது.

“நல்ல கார்னர் ப்ளாட் இருக்குமா?” என்றபடி மீண்டும் சோபாவில் அமர்ந்தான்.

“மொத்த லே அவுட்டும் நம்ம கையிலதான் அண்ணாச்சி... உங்களுக்குப் போகதான் மிச்சம். சேர்ந்தாப்புல அஞ்ச புக் பண்ணிறட்டுமா?”

“மூணு போதும்...” இரண்டு வாங்கலாம் என்ற யோசனையில் இருந்த ராஜ்குமார் மந்திரிக்கப்பட்டவன் போல மூன்றுக்கு ஓகே சொன்னான்.

கையோடு மூவாயிரம் ரூபாயை வாங்கிக்கொண்ட செல்வமணி, “இது அட்வான்ஸ் அண்ணாச்சி... இன்னும் 24 மாசம்... நானே பத்திரம் பதிஞ்சு தந்திடறேன்... ஒருநாள் உங்கள லே அவுட்டுக்கே கூட்டிட்டு போறேன். எது எது வேணுமோ நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... உங்ககிட்ட இருந்து ஒரு வியாபாரத்தை ஆரம்பிச்சா தனி ராசிதான். வாரேன் அண்ணாச்சி...” கையில் வாங்கிய மூவாயிரம் ரூபாயைக் கண்களில் ஒற்றிப் பையில் போட்டுக்கொண்டு புறப்பட்டான்.

மாதா மாதம் தேடி வந்து பணத்தை வாங்கிக்கொள்வதோடு கையோடு அதற்கான ரசீதையும் கொடுத்துவிட்டுப் போவான். நடுவில் ஒருமுறை ஒரு லே அவுட் பிளானைக் கொண்டுவந்து காட்டி அதில் மூன்று ப்ளாட்டுகளையும் ராஜ்குமார் என்று பெயர் போட்டுக் குறித்துக்கொண்டும் போனான்.

20 மாதங்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல்தான் போனது. முதல் ரிங்... தவறினால் மூன்றாவது ரிங்கில் போனை எடுக்கும் செல்வமணி போனை அட்டெண்ட் செய்யாமலே தவிர்க்கத் தொடங்கினான். இரண்டு ஆண்டுக் கணக்கில் இன்னும் நாலு மாத தவணை கட்ட வேண்டும். ஆனால், ராஜ்குமாருக்கு என்ன வழி என்று தெரியவில்லை.

சட்டையை மாட்டிக்கொண்டு, நான் செல்வமணி ஆபீஸ் வரை போயிட்டு வரேன் என்று மனைவியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

செல்வமணி ஆபீஸ் வாசலில் ஏழு எட்டுப் பேர் நின்று கொண்டிருந்தார்கள். எல்லோர் கையிலும் செல்வமணி கொடுத்த ரசீதுகள். பார்த்ததுமே ராஜ்குமாருக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. அவர்களும் ராஜ்குமார்கள்தான் என்று.

ரியல் எஸ்டேட் - சில தகவல்கள்

நகர்கள் விரிவடைந்துகொண்டே வரும் நிலையில் மனை வாங்குவது நல்ல முதலீடுதான்.

மிடில் கிளாஸ் மக்களின் சொந்த வீட்டுக் கனவைப் பூர்த்தி செய்யக் கைகொடுப்பது இது போன்ற மனைத் திட்டங்கள்தான்.

சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து மனை வாங்கும் திட்டம் எல்லோரையும் சொந்த மனைக்காரர்களாக ஆக்கவல்லது.

ஆனால், இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்யும்போது இரண்டு மடங்கு கவனத்தோடு இருக்க வேண்டும். ஏனெனில், ஏமாறும் வாய்ப்பு மிக அதிகம்.

மனைத் திட்டங்கள் அறிவிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எத்தகைய பின்னணி கொண்டவை என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

இது போன்ற திட்டங்களில் வழங்கப்படும் மனைகள் உரிய அனுமதி பெற்றவையா என்பதைப் பார்க்க வேண்டும்.

முதலீட்டுக்கு ஏற்ற ரிட்டர்ன் தருபவையாக மனைகள் இருக்குமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இந்த வகை முதலீட்டைச் செய்யும்போது எவ்வளவு சீக்கிரம் பத்திரப் பதிவு செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் செய்வது நல்லது.

இந்த முதலீட்டுக்கான பணம் செலுத்திய ஆதாரங்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ரியல் எஸ்டேட் சிறப்பான முதலீடுதான், அதைச் சரியாகப் புரிந்துகொண்டு முறையாகச் செய்பவர்களுக்கு!

கடன் வாங்கிப் படிக்கலாமா?

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon