மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

உலகக் கோப்பைக்குத் தயாராகும் அணிகள்!

உலகக் கோப்பைக்குத் தயாராகும் அணிகள்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முன் தயாரிப்பில் ஒவ்வோர் அணியும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளும் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து ஃபார்முக்குத் திரும்பியுள்ளன.

இந்தியாவிடம் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளைப் பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியை 366 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு காலத் தடையில் உள்ளனர். இந்த இரு வீரர்கள் இல்லாதது அந்த அணியின் பலத்தைப் பெருமளவில் குறைத்தது. இந்த நிலையில் அடுத்த மாதத்துடன் இருவரது தடைக்காலம் நிறைவடைகிறது.

ஆஷஸ் தொடர், உலகக் கோப்பை தொடர் இரண்டிலும் இந்த வீரர்கள் பங்கெடுக்கவுள்ளனர். இவர்களது வருகை ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் பலமாக அமையும்.

‘‘நீங்கள் விரும்புவது போல் இருவரும் அணிக்குத் திரும்பி அதிக ரன்கள் குவிப்பார்கள். நாங்கள் ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து செல்லும்போது, அந்தத் தொடரின் வெற்றியில் இருவருடைய ஆட்டமும் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதாக நான் பார்க்கிறேன். அவர்கள் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன். கடந்த காலத்தைப் போன்று மீண்டும் இவர்கள் அணிக்கு வெற்றியைத் தேடித்தருவார்கள்’’ என்று தற்போதைய கேப்டன் டிம் பெய்ன், கூறினார்.

மற்றொரு புறம் இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் டெஸ்ட் தொடரைப் பறிகொடுத்துள்ளது. இரு அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 381 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆண்டிகுவா நார்த் சவுண்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0-2 என மோசமாக இழந்துள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்றாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை வெற்றி கண்டிருப்பதன் மூலம் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளது. உலகக் கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த இரு தொடர்களின் முடிவுகள் முக்கியமாகப் பார்க்கப்பட்டுவருகின்றன.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon