மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

பெண் என்றால் பூ மட்டும் தானா?

பெண் என்றால் பூ மட்டும் தானா?

இளைஞர்களின் கலைக் கண்காட்சி: ஒரு பார்வை - 3

மதரா

சென்னை பெசன்ட் நகர் ஸ்பேஸஸ் கலை மையத்தில் நடைபெறும் கலைக் கண்காட்சிக்குள் நுழைந்தால் அரங்கின் வலது புறம் சிந்துஜாவின் படைப்புகள் வரிசையாய் அணிவகுத்து வரவேற்கின்றன.

சென்னை கவின் கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள சிந்துஜா கலந்து கொள்ளும் மூன்றாவது கண்காட்சி இது. சமூகத்தின் மீதான தனக்குள்ள விமர்சனத்தைத் தனது ஓவியங்கள் மூலமாக முன்வைக்கிறார். பெண்களின் வலிகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நுட்பமாகத் தன் படைப்பின் வழி காட்சிப்படுத்தியுள்ளார்.

அவருடனான உரையாடலில் சன்னமான குரலில் தனது படைப்புகள் குறித்து பேசத் தொடங்கினார். “எனக்குள் நிறைய கோபம், வலிகள் இருக்கின்றன. ஆனால், அதை அனைத்தையும் இங்கு யார் மீதும் காட்டிவிட முடியாது. வெளியே சிரிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறதல்லவா... அந்தக் கோபமும் வலியும் என் படைப்பின் வழி வெளிவருகின்றன.

பெண் என்றால் சமூகத்தில், வீட்டில் சில அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பழிச்சொற்கள் அனைத்தும் பெண்களைக் குறிப்பதாகவும் பெண் உறுப்பைக் குறிப்பதாகவும் இருக்கின்றன. அதே சமயம் மென்மையோடும் பெண்களை ஒப்பிடுகின்றனர். இந்த முரணைப் படைப்பாக்குகிறேன். இந்தத் தொடர் ஓவியங்கள் பலவற்றில் பூக்களைப் பிரதானப்படுத்தியிருக்கிறேன். அவற்றில் கடினத்தன்மையைக் குறிப்பதற்காகப் பெண் உறுப்பில் ரத்தம் வடிவது போன்று காட்சிப்படுத்தியிருக்கிறேன்” என்றார்.

நீர் வண்ண ஓவியங்களாக இவற்றை வரைவதற்குப் பிரத்யேகக் காரணம் ஏதும் உண்டா என்று கேட்டபோது, “நீர் வண்ண ஓவியங்கள் மென்மையைக் குறிப்பதாக இருக்கும். அதில் ஒரு கடினத்தன்மையை ஏற்படுத்துவதற்காக வழியும் ரத்தம் போன்று சிவப்பு வண்ணத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன்” என்றார்.

“பிரபலமான ஓவியங்களில் பெண்கள் ரோஜாவைக் கையில் வைத்திருப்பது போலவும் தாமரையைக் கையில் வைத்திருப்பது போலவும் இருக்கும். நான் இதை மாற்ற நினைத்தேன். சங்குப்பூ, கள்ளிப் பூ, செம்பருத்தி ஆகியவற்றை அதற்காகத் தேர்ந்தெடுத்தேன்” என்று விளக்கினார்.

சிந்துஜா தனது ஓவியங்களில் தன்னையே மாதிரியாக்கியுள்ளார். அவற்றில் சில ஓவியங்கள் தலைமுடி இல்லாமல் மொட்டைத் தலையுடன் இருந்தன.

“பெண்களுக்குத் தலைமுடிதான் அழகு என்று இங்கு நம்பப்படுகிறது. அந்த முன்முடிவுகளின் மீதான எனது எதிர்வினையாக இந்த ஓவியங்களை வரைந்தேன். அதற்கு என்னையே மாதிரியாகக் கொண்டேன். அதேபோல் கறுப்பு அழகல்ல என்பதும் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்துவருகிறது. அதனால் கறுப்பு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார்.

முகப் பருக்கள் அழகைக் கெடுக்கும் என்பதால் அதை வெறுக்கிறோம். அதுவே ஒரு வைரமாகத் தோன்றினால் இப்படி வெறுப்போமா என்று கேள்வி எழுப்பிய அவர் தனது ஓவியத்தில் கண்ணாடிக் கற்களைக் கொண்டு முகப் பருக்களை உருவாக்கியுள்ளார்.

ஒருநாள் தன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள செடியில் மலர்ந்த பூவை ரசித்துப் பார்த்திருந்த சிந்துஜா அதைப் புகைப்படம் எடுத்துள்ளார். புகைப்படத்தில் தான் நேரில் பார்த்த ஏதோ ஒரு விஷயம் குறைந்ததாக உணர அதை உடனே வரையத் தொடங்கியுள்ளார்.

ரோஜா மலர் ஒன்று மொட்டாக இருந்து மலர்ந்து பின் காய்ந்து உதிர்வதைத் தொடர் ஓவியங்களாக வரைந்திருந்தார் சிந்துஜா. அவற்றில் ரோஜா நல்ல மலர்ந்த நிலையில் இருந்த ஓவியம் மட்டும் தனித்து தெரியும்படி சில்வர் வண்ணத்தில் சட்டகம் மாட்டப்பட்டிருந்தது.

“அழகாக மலர்ந்த பூவை விரும்பும் நாம் அது முளைக்காத மொட்டாக இருந்தபோது கண்டுகொள்வதில்லை. அதே போல காய்ந்து சருகாகி உதிரும்போதும் கண்டுகொள்வதில்லை. அது உச்சத்தில் இருக்கும் பொழுதையே நேசிக்கிறோம். உறவுகளுக்கும்கூட இதைப் பொருத்திப் பார்க்கலாம்” என்று விளக்கிக் கூறினார் சிந்துஜா .

அதேபோல் இரவு நேரத்தில் மாடியில் நட்சத்திரங்களையும் மேகங்களையும் நிலவையும் ரசித்துப் பார்த்திருந்த சிந்துஜா அதன் அழகையும் தன் ஓவியத்துக்கு மொழிபெயர்த்துள்ளார்.

நட்சத்திரங்களைத் தனது கூந்தலில் அலங்கரித்துக் கொண்ட சிந்துஜா இயற்கையில் மனதைப் பறிகொடுப்பதில் குழந்தையாகவும் சமூகத்தின் பிற்போக்குப் பழக்கங்களை எரிக்கும் அக்கினியாகவும் இரு வேறு ரூபம் எடுக்கிறார்.

கண்காட்சியில் கலந்துகொண்ட மற்ற கலைஞர்களின் படைப்பு குறித்து மாலை 7 மணிப் பதிப்பில் பார்க்கலாம்.

நினைவுகளைக் கலையாக்கும் கலைஞர்!

சமூகக் கொடுமைகளுக்குக் கலைஞனின் எதிர்வினை!

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon