மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

பாஜக மட்டும்தான் தேசியக் கட்சியா? ஜெயக்குமார்

பாஜக மட்டும்தான் தேசியக் கட்சியா? ஜெயக்குமார்

தேசியக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருவதாக பன்னீர்செல்வம் கூறியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று (பிப்ரவரி 4) விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான விவாதம் தற்போதே சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெறவுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடம்பெறலாம் என்றும் இதற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், மாநிலக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்து பேசி வருகின்றன. அது பரம ரகசியம். முடிச்சு அவிழ்க்கப்பட்டவுடன் ஊடகங்களுக்குத்தான் முதலில் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வாங்குவோம். கூட்டணி இறுதி செய்து தொகுதிப் பங்கீடு குறித்து அறிவித்த பிறகு, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட மனு அளித்திருந்தவர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டு வெற்றிக்கு பணியாற்றுவர். தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.

தேசியக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக ஓபிஎஸ் கூறியுள்ளார், காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் உள்ளது. அப்படியென்றால் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருவதாக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு, “அரசியலில் கடைசி நேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தேசிய கட்சிகள் என்றால் பல கட்சிகளும் அதில் வருகிறது. தேசியக் கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். கூட்டணி குறித்த முடிச்சுகள் அவிழ்க்கப்பட்ட பிறகு அதுபற்றி அறிவிக்கப்படும் ” என்று பதிலளித்துள்ளார்.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon