மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? அன்புமணி பதில்!

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை?  அன்புமணி பதில்!

மக்களவை தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பான கேள்விக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிவந்த பாமக, கூட்டணி குறித்து அதிமுகவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியானது. தமிழக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கைகள் வெளியிட்டு வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், சமீப காலங்களில் தமிழக அரசை வரவேற்கும் விதமாகவும் வலியுறுத்தும் விதமாகவுமே அறிக்கைகளை வெளியிடுகிறார்.

இந்த நிலையில் வடசென்னை மாவட்ட பாமகவின் புதிய அலுவலக திறப்பு விழா தண்டையார்ப்பேட்டையில் இன்று (பிப்ரவரி 4) நடைபெற்றது. அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு, அலுவலகத்தை திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணியிடம், அதிமுகவுடன் பாமக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகக் கூறப்படுகிறதே என்னும் கேள்விக்கு, “பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. முடிவு வந்தவுடன் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்” என்று பதிலளித்துள்ளார்.

இதன்மூலம் அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்திவரும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக-பாஜக-பாமக கூட்டணி அமையவுள்ளதாக கூறப்படும் நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டை அதிமுகவும் பாமகவும் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon