மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

பாலாற்றில் மேலும் 30 தடுப்பணைகள்: ஆந்திர திட்டத்துக்கான ஆதாரம் இதோ!

பாலாற்றில் மேலும் 30 தடுப்பணைகள்: ஆந்திர திட்டத்துக்கான ஆதாரம் இதோ!

பாலாற்றில் தற்போதைய சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு மேலும் 30 தடுப்பணைகளை கட்டத் தயாராகிக் கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பாலாற்றை நம்பியுள்ள வட தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

ஆந்திராவில் தொடங்கி தமிழகத்தில் பாயும் பாலாற்றை நம்பி தமிழகத்தில் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை என்று ஐந்து முக்கிய மாவட்டங்கள் இருக்கின்றன. பயிர்களுக்கான நீருக்கும், உயிர்களுக்கான குடிநீருக்கும் பாலாற்றையே சார்ந்திருக்கும் இந்த ஐந்து மாவட்டங்களில் ஏற்கனவே வறட்சி நிலவும் நிலையில்... மேலும் 30 தடுப்பணைகள் கட்டுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றிருக்கிறார் பாலாற்றுப் பாதுகாப்புக்காக போராடி வரும் சமூக ஆர்வலர் ஆம்பலூர் அசோகன். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆம்பலூர் அசோகன் பாலாற்றுப் பாதுகாப்புக்காக பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்.

அவரிடம் தமிழின் முதல் மொபைல் தினசரி மின்னம்பலம். காம் சார்பில் பேசினோம்.

“இந்தியாவில் பன்மாநில நதிநீர் சட்டம் என்ற சட்டம் இருக்கிறது. இதன் படி ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்லும்போது இரு மாநிலங்கள் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்டக் கூடாது. ஆனால் பாலாறு விவகாரத்தில் ஆந்திர மாநில அரசு இந்த சட்டத்தை பல வருடங்களாக மீறி பல தடுப்பணைகளை பாலாற்றில் கட்டிக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலாறு தமிழகத்துக்கு வரும் வரையில் ஆந்திர பகுதியில் 21 தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறது. ராஜசேகர் ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தபோது 40 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மினி டேம் ஒன்றை கட்ட முயற்சித்தார். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இதை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தினார்.

இப்போது ஆந்திர முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு தனது குப்பம் தொகுதிக்கு உட்பட்ட பாலாற்றுப் பகுதிகளில் மேலும் அணை கட்ட முயற்சி செய்கிறார். ஏற்கனவே கட்டப்பட்ட 21 தடுப்பணைகளை செப்பனிடுவதற்காக 47 கோடி ரூபாயை ஆந்திர அரசு ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதுபற்றி உண்மைத் தகவல்கள் தெரிந்துகொள்வதற்காக அப்பர் பாலாறு டிவிஷன் செயற்பொறியாளர் ஏ.பி. அன்பரசனிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகளைக் கேட்டிருந்தேன். அதற்கு அவர் தனது அதிகாரிகள் மூலமாக விசாரித்து அறிந்து எனக்கு பதில் அனுப்பியுள்ளார். அளித்துள்ள பதிலில், ‘சித்தூர் கண்காணிப்புப் பொறியாளர், பாலமனேரி செயற்பொறியாளர் ஆகிய ஆந்திர அதிகாரிகளிடம் நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் பற்றி விசாரித்தபோது... ஏற்கனவே கட்டப்பட்ட 21 தடுப்பணைகளை புனரமைக்க 47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், விசாரித்ததில் பாலாற்றின் குறுக்கே 500 மீட்டருக்கு இடைவெளியில் ஒரு தடுப்பணை அமைக்கும் விதமாக, 30 புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கு கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார் அசோகன்.

மேலும் அவர் நம்மிடம், “இந்த தடுப்பணைகளை வனவிலங்குகளின் குடிநீருக்காக என்று சொல்லி நியாயப்படுத்தப் பார்க்கிறது ஆந்திர அரசு. ஆனால் அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் தமிழக அரசுக்குத் தெரிவிக்காமல் இப்படி திட்டமிடுவது சட்ட விரோதம். உடனடியாக தமிழக அரசு இதில் செயல்பட்டாக வேண்டும். ஏனென்றால் ஆந்திர அரசுக்கு ஒரு தடுப்பணை கட்டுவதற்கு எட்டு நாட்கள் போதும். அவ்வளவு வேகமாகக் கட்டிமுடிக்கக் கூடியவர்கள். அதன் பிறகு தடுப்பதை விட வெகு அவசரமாக செயல்பட்டு தமிழக அரசு இதைத் தடுக்க வேண்டும்” என்கிறார் ஆம்பலூர் அசோகன்.

“மத்திய பாஜக அரசோடு கூட்டணியில் இருந்த காலகட்டத்தில்தான் பாலாற்றில் மேலும் 30 தடுப்பணைகளைக் கட்டுவதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு. இப்போது அவருக்கு மத்திய அரசுடன் இணக்கம் இல்லாவிட்டால் கூட தடுப்பணைப் பணிகளில் தொய்வு இல்லை. ஆனால் ஜெயலலிதா இறந்த பிறகு மத்திய அரசுக்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வரும் தமிழக அரசுக்கு மத்திய அரசு என்ன நன்மை செய்திருக்கிறது? இதுபற்றி பிரதமரிடம் வலியுறுத்தி உடனடியாகத் தடுக்க வேண்டும்.

இல்லையேல் இப்போது பாலாற்றின் நிலத்தடி நீரால் பயன்பெற்றுக் கொண்டிருக்கும் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை ஆகிய ஐந்து மாவட்டங்களின் நிலத்தடி நீர் மேலும் குறையும். கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு பாலாற்று நிலத்தடி நீர் தான் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பும் இருக்கிறது” என்றும் தெரிவித்தார் ஆம்பலூர் அசோகன்.

தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிடுமாறு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்துக்கு உடனடியாக சென்று ஆந்திராவின் 30 தடுப்பணை முயற்சியை கருத்துரு அளவிலேயே தடுத்து நிறுத்த வேண்டும்! செய்வீர்களா முதல்வரே? செய்வீர்களா?

-ஆரா

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon