மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

தை அமாவாசை: கும்பமேளாவில் குவியும் பக்தர்கள்!

தை அமாவாசை: கும்பமேளாவில் குவியும் பக்தர்கள்!

தை அமாவாசையையொட்டி, உத்தரப் பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு 3 கோடி பேர் வரை வந்து செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் கும்பமேளா விழா நடந்து வருகிறது. இதையொட்டி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடப் பெருமளவில் மக்கள் குவிந்து வருகின்றனர். கடந்த ஜனவரி 15ஆம் தேதியில் இருந்து மார்ச் 4ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, மவுனி அமாவாசை என்றழைக்கப்படும் தை அமாவாசை இன்று (பிப்ரவரி 4) வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இது கும்பமேளாவின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

இதனால், இன்று மட்டும் சுமார் 3 கோடி பேர் கும்பமேளாவில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கும்பமேளா பகுதியானது மொத்தம் 10 மண்டலங்களாகவும், 25 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு அவசர நடவடிக்கை மேற்கொள்வதற்காக, 40 காவல்நிலையங்களும் சில தீயணைப்பு நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன. 440 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்புப் பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஜனவரி 15, பிப்ரவரி 4 ஆகிய தினங்களை அடுத்து, பிப்ரவரி 10ஆம் தேதியன்று கொண்டாடப்படும் வசந்த பஞ்சமி அன்றும் கும்பமேளாவில் அதிகளவில் மக்கள் கலந்துகொள்வர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon