மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

தம்பிதுரையை பாராட்டிய கனிமொழி

தம்பிதுரையை பாராட்டிய கனிமொழி

தம்பிதுரை பாஜகவை விமர்சிப்பது குறித்த கேள்விக்கு, திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார்.

மக்களவைத் துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை, தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். அதிமுகவுடன் பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மறைமுகமாக தகவல் வெளியாகி வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றே அவர் பேசி வருகிறார். பட்ஜெட்டை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றிருந்த நிலையில், பட்ஜெட்டில் தமிழகத்திற்கான அறிவிப்புகள் இல்லையென தம்பிதுரை விமர்சித்திருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 4) செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “பாஜக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 5 பட்ஜெட்களிலும் தமிழகத்திற்கு எந்த நலனும் கிடைக்கவில்லை. தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகை குறித்து ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும் கேட்டார். எடப்பாடி பழனிசாமியும் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார்.ஆனால் இன்னும் வரவில்லை. ஜிஎஸ்டி வேண்டாம் என்று சொன்னோம், அதனை கொண்டுவந்தனர். ஜிஎஸ்டியில் வரவேண்டிய நிலுவைத் தொகையையும் இன்னும் தரவில்லை. கஜா புயலுக்கு கேட்ட நிவாரண நிதியும் இன்னும் வரவில்லை. தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிபோயுள்ளன” என்று குற்றம் சாட்டினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கனிமொழி, இதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “சரியான நபர் தவறான கட்சியில் இருக்கிறார் என வாஜ்பாயைப் பற்றி கலைஞர் கூறியதுதான் எனது நினைவுக்கு வருகிறது. தம்பிதுரை கூறுவதைத்தான் மத்திய அரசின் மீது திமுக தொடர்ந்து விமர்சனமாக வைத்துவருகிறது. இப்போதுதான் அதிமுகவிலிருந்து இதனை ஒருவர் புரிந்துகொண்டு பேசுகிறார். அவரோடு இருக்கும் மற்றவர்களுக்கும் விளங்க வைத்தால் நன்றாக இருக்கும்” என்று பதிலளித்தார்.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon