மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 11 ஆக 2020

நினைவுகளைக் கலையாக்கும் கலைஞர்!

நினைவுகளைக் கலையாக்கும் கலைஞர்!

இளைஞர்களின் கலைக் கண்காட்சி: ஒரு பார்வை - 2

மதரா

பெசன்ட் நகர் ஸ்பேஸஸ் கலை மையத்தில் நடைபெறும் கலைக் கண்காட்சியில் கலைஞர்கள் குறிப்பிட்ட தலைப்பின் கீழ் அல்லாமல் பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர். இருப்பினும் அவற்றுக்குள் சில ஒற்றுமைகளையும் காண முடிகிறது. சமகாலத்தில் தன்னை உள ரீதியாகப் பாதிக்கின்ற சம்பவங்கள், நினைவுகளின் வெளிப்பாடாகவே இளம் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.

பத்மப்ரியா தான் வரைந்த பன்னிரண்டு ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தார். அவை அனைத்தையும் அவரது பாட்டியின் நினைவாக உருவாக்கியுள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்துபோன பாட்டி இப்போதும் நினைவுகள் வழி, கனவுகள் வழி உடன் இருப்பதாக உணர்கிறார்.

இந்த ஓவியங்கள் வரைவதற்கான காரணம், அதற்குத் தேர்ந்துகொண்ட மூலப்பொருள்கள், ஓவியம் வரைவதற்கு முன்னரும் பின்னரும் உள்ள மனநிலை எனப் பல விஷயங்கள் குறித்து சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார்.

“இந்தப் பன்னிரண்டு ஓவியங்களும் வெவ்வேறாக இருந்தாலும் இவை அனைத்தையும் சேர்த்து நான் என் பாட்டியின் போர்ட்ரைட்டாகவே பார்க்கிறேன். பாட்டியின் கைகள் எப்போதும் ஏதேனும் ஓர் அசைவுடனேயே காணப்படும். எப்போதும் அவர் கைகளால் ஏதேனும் செய்தபடியே இருப்பார். அவர் நினைவாக என்னுள் அவரது கைகளே பிரதானமாக இருக்கின்றன. எப்போதும் அவர் கைகளின் மேல் என் கவனம் இருந்திருக்கிறது. அதைக் குறிக்கும் விதமாகவே அவர் கைகளை வரைந்துள்ளேன். நினைவில் இருந்தாலும் புகைப்படத்தைப் பார்த்தே வரைந்தேன்” என்றார்.

ஒரே மாதிரியான ஐந்து ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. அவை பற்றி பத்மப்ரியாவே விளக்கினார். “திருவாரூர் மாவட்டம் விளக்குடி தான் பாட்டி வாழ்ந்து மறைந்த ஊர். அந்த ஊரின் வரைபடத்தை தொப்புள் கொடி போல் வரைந்துள்ளேன். அதைச் சுற்றியுள்ள ஓவியங்கள், அவரது பிள்ளைகள் மணம் முடித்துச் சென்ற ஊர்களின் வரைபடங்கள். அதைக் குறிப்பதற்காகவே தொப்புள் கொடி போன்று வரைந்தேன். ஒன்றுடன் ஒன்று தொடர்பிருப்பதால் அடுத்தடுத்து வைத்துள்ளேன். அதே நேரத்தில் கால மாற்றத்தில் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கும் விதமாக தனித்தனி ஓவியங்களாக வரைந்தேன்” என்று கூறினார்.

அந்த ஓவியங்களின் நடுவே மண்டை ஓட்டு ஓவியம் ஒன்று இருந்தது. அது பற்றி கேட்டோம். “ஒருநாள் கனவில் பாட்டி மண்டை ஓட்டுடன் தோன்றினார். அந்தப் பாதிப்பாலேயே இதை வரைந்தேன். அவர் புகைப்படத்தைக் கொண்டு மண்டை ஓடு எவ்வாறு இருந்திருக்கும் என ஆய்வு செய்து இதை வரைந்தேன்.”

பாட்டியை ஒருமுறை பூரான் கடித்ததும் அதனால் அப்போது மனதிற்குள் எழுந்த அச்சமும் தற்போது நினைவில் தங்கியுள்ளதைக் குறிக்கும்விதமாக பூரான் ஒன்றை வரைந்துள்ளார். மேலும் அவரது முகம், அவர் அணிந்திருந்த பாசிமணியையும் பத்மப்ரியா ஓவியமாகத் தீட்டியுள்ளார்.

ஓவியங்கள் சாதாரண காகிதங்கள் போல் அல்லாமல் வித்தியாசமாக இருந்தன. என்ன மாதிரியான காகிதங்கள் இவை என்று கேட்டபோது அவர் கூறிய தகவல்கள் புதுமையாக இருந்தன.

“அரிசி, பயிறு உள்ளிட்ட தானியங்களை புடைக்கும்போது முறத்தில் (சொலவு) இருக்கும் இடைவெளியில் தானியங்கள் போய் இருந்துகொள்ளும். இதைத் தவிர்ப்பதற்காக காகிதங்கள், வெந்தயம் ஆகியவற்றை அரைத்து மாவாக்கி முறத்தின் மேல் பூசுவார்கள். மீதம் இருக்கும் மாவை வேறு பாத்திரங்களின் மேல் தேய்த்து வார்ப்பு உருவாக்குவார்கள். என் பாட்டியுடன் நான் இதைச் செய்திருக்கிறேன். என் பாட்டி இதை எனக்குக் கற்றுக்கொடுத்தார். இந்த ஓவியங்களை வரைய நினைத்தபோதே வரைவதற்கான காகிதங்களை இந்த முறையில் தயாரித்து உருவாக்க வேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டேன்.

பயன்படுத்திய வண்ணங்களுக்கும் பாட்டிதான் காரணம். வெற்றிலை போடுவது பாட்டியின் வழக்கங்களில் ஒன்று. அதனால் கொட்டப் பாக்கு, சுண்ணாம்பு, வெற்றிலை ஆகியவற்றை அரைத்து இந்த வண்ணத்தை உருவாக்கினேன். அத்துடன் நானும் என் அண்ணனும் தக்காளி பாட்டி என்றே அழைப்போம். அதனால் தக்காளியையும் வண்ணத்துக்குப் பயன்படுத்தியுள்ளேன்” என்றார்.

“பாட்டியின் இருப்பை உணர்த்தும் விதமாக அவரது வெற்றிலைப் பெட்டியில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை நிரப்பி மேஜையில் வைத்தேன். அவர் வீட்டில் இருப்பது போன்ற உணர்வு வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டது” என்று கூறினார். அந்தப் பெட்டியையும் வரைந்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக இந்தப் படங்கள் அனைத்தையும் சேர்த்து என் பாட்டியின் போர்ட்ரைட்டாக கூறினேன் அல்லவா, ஒருவகையில் இது எனது போர்ட்ரைட்டும் கூட. ஏனென்றால் என் பாட்டியின் நினைவுகள் என்னுள் இருக்கின்றன. அவரது உடல்மொழி எனக்கும் இருக்கிறது. சிறு வயதில் பாட்டி என்னைப் போன்றே இருந்ததாகக் கூறக்கேட்டிருக்கிறேன். அதனால்தான் இதை எனது போர்ட்ரைட் என்றும் கூறுகிறேன்” என்று பேசி முடித்தார்.

கணநேரத்தில் தோன்றி மறையும் நினைவுகளையும் மடக்கிப் பிடித்து கலையாக மாற்றும் வித்தையைப் பத்மப்ரியா சாதாரணமாகச் செய்துவிடுகிறார்.

கண்காட்சியில் கலந்துகொண்ட மற்ற கலைஞர்களின் படைப்புகள் பற்றி மாலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்.

சமூகக் கொடுமைகளுக்குக் கலைஞனின் எதிர்வினை!

ஞாயிறு, 3 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon