மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

சமூகக் கொடுமைகளுக்குக் கலைஞனின் எதிர்வினை!

சமூகக் கொடுமைகளுக்குக் கலைஞனின் எதிர்வினை!

இளைஞர்களின் கலைக் கண்காட்சி: ஒரு பார்வை

மதரா

சென்னை கவின் கல்லூரியைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் மாணவ மாணவியரின் கலைப் படைப்புகள் பெசன்ட் நகர் ஸ்பேஸஸ் கலை மையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஓவியங்கள், டெரகோட்டா சிற்பங்கள், மரச்சிற்பங்கள், துணிகளில் வரையப்பட்ட ஓவியங்கள், ஆடியோ பதிவுகள் எனப் பலவிதமான கலைப் படைப்புகள் 15 கலைஞர்களால் வெவ்வேறு கருப்பொருள்களில் படைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் 24ஆம்தேதி முதல் 30ஆம் தேதி வரை உழைப்பாளிகள் குறித்து இந்தக் கலைஞர்கள் ஒரு கண்காட்சியை இதே ஸ்பேஸஸ் கலை மையத்தில் நடத்தினர். அது குறித்து நமது மின்னம்பலத்தில் விரிவாகப் பதிவு செய்தோம். தற்போது சென்னையில் இவர்கள் இரண்டாவது முறையாக தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கண்காட்சி குறித்து அந்த இளம் கலைஞர்களுடன் உரையாடினோம். “கலைப் பண்பாட்டு துறை கண்காட்சி வைப்பதற்கு நிதி தருவதாக அறிவித்தது. தனி நபர் கண்காட்சி வைப்பதற்கு 25,000 ரூபாயும், ஒன்றுக்கு மேற்பட்டோர் பங்கெடுத்தால் 50 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாகத் தெரிவித்திருந்தார்கள். இருவர் இணைந்து செய்தாலும் அந்தத் தொகை கிடைக்கும் என்றாலும் நாங்கள் எங்கள் குழுவினர் அனைவரும் இணைந்து பங்கெடுக்கத் திட்டமிட்டோம்” என்று சரண்ராஜ் கூறினார்.

கலைப் பண்பாட்டுத் துறை அறிவித்த பின்னர் ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகளை உருவாக்கத் தொடங்கினீர்களா என்று கேட்ட போது அதற்கான பதிலை சிந்துஜா அளித்தார். “இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு கண்காட்சி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தோம். ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகளை உருவாக்கியபடி இருந்தோம். கலைப் பண்பாட்டுத் துறையின் இந்த முன்னெடுப்பால் அது இப்போது சாத்தியமானது” என்றார்.

சமூகக் கொடுமைகள் குறித்த யாருடைய எதிர்வினையைக் காட்டிலும் ஒரு கலைஞனுடைய எதிர்வினை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. தனது படைப்பின் வழியே கேள்வி கேட்கவும், விவாதமாக மாற்றவும், முடிவதோடு அதன் மூலத்தை அசைத்துப் பார்க்கும் வல்லமையும் கலைஞனுக்கு உண்டு.

ஆணவப் படுகொலைகள் குறித்த செய்திகளை நாளும் கடந்து செல்கிறோம். ஓவியர் சரண்ராஜின் படைப்பு ஒன்று அதை வேறொரு கோணத்தில் காட்சிப்படுத்தியுள்ளது. இதை இன்ஸ்டாலேஷன் ஆர்ட் பாணியில் (Installation art) அவர் உருவாக்கியுள்ளார்.

ஓவியங்களை, புடைப்புச் சிற்பங்களை ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்க முடியும். இன்ஸ்டல்லேஷன் ஆர்ட் (Installation art) என்று சொல்லப்படும் இந்தப் பாணியில் முப்பரிமாணத்தில் பார்வையாளர்கள் படைப்பைச் சுற்றிவந்து பார்க்கும் விதமாக பல்வேறு பொருள்களை உபயோகித்து உருவாக்கப்படுகிறது.

கம்பிகளால் செய்யப்பட்ட இரு பெரிய பந்துகள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. அந்த இரு பந்துகளும் இணையும் இடத்தில் இரு பலூன்கள் வைக்கப்பட்டிருந்தன. வெடித்த பலூன்கள் அதன் கம்பிகளில் தொங்கிக்கொண்டிருந்தன.

அரங்கில் மையத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் படைப்பு பார்ப்பதற்குப் புதுமையாக இருந்தது. அதே நேரத்தில் அவை கூறும் விஷயங்கள் குறித்து உடனடியாகப் புரிந்துகொள்ள முடியாததால் சரண்ராஜிடமே படைப்பு குறித்து கேட்டோம்.

“சாதியச் சமூகத்தில் காதலுக்கு உள்ள நெருக்கடி குறித்து இந்தப் படைப்பை நான் உருவாக்கியுள்ளேன். கூர்மையான உலோக கம்பிகளால் ஆன இரு பந்துகளையும் இரு சமூகமாக பார்க்கிறேன். அவை இணையும் மையத்தில் காதல் மலர்கிறது. அந்தக் காதலை குறிப்பதற்காக இரு பலூன்களை வைத்துள்ளேன்.

இருத்தல் குறித்த பல கேள்விகள் எனக்குள் இருந்தாலும் என் கண் முன்னால் மிகவும் உறுத்தலாக இருப்பது சாதிக் கொடுமைகள் தான். ஒரு கடையில் பலூன் வாங்கி மகிழ்ச்சியாக விளையாடுவோம். ஆனால் திடீரென அது வெடிக்கும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது. அய்யோ போச்சே என்ற பரிதாபமும் பரிதவிப்பும் ஏற்படுகிறது. சுற்றி இருப்பவர்களையும் அந்தச் சத்தம் திரும்பிப் பார்க்க வைக்கிறது. ஆனால் அந்த ஒரு அதிர்ச்சியைக்கூட ஆணவப் படுகொலைகள் பற்றிக் கேள்விப்படும்போது நாம் வெளிப்படுத்தாமல் உள்ளோம்.

மீ டூவுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள், சிறுமி ராஜலட்சுமியின் படுகொலையைக் கண்டு கொள்ளாமல் நகர்வது அதிர்ச்சியாக உள்ளது.

ஆணவப் படுகொலை தலித், தலித் அல்லாதோர் என்பதற்குள் மட்டும் நடக்கவில்லை. இடைநிலை சாதிகளுக்குள்ளேயே இத்தகைய கொடுமைகள் அரங்கேறுகின்றன” என்று படைப்பின் நோக்கம் பற்றி கூறினார்.

இந்தப் பாணியில் தான் இந்தப் படைப்பை உருவாக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்தீர்கள் என்று கேட்ட போது, “இந்தக் கருப்பொருள் தோன்றியவுடனே இதில் தான் செய்ய வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். நமது கருப்பொருள்தான் அதன் மீடியத்தை தேர்வு செய்கிறது. இந்தக் கரடுமுரடான கம்பிகளின் நடுவே இருக்கும் பலூன் சிதறிக் கிடக்கும் உடைந்த பலூன்கள் ஆகியவற்றை இந்த முறையில் உருவாக்கினால்தான் அதன் தாக்கத்தை முழுதாக உணர முடியும்” என்று கூறினார்.

சென்னை கவின்கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள சரண்ராஜ் கலந்துகொள்ளும் நான்காவது கண்காட்சி இது. டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச கலைக் கண்காட்சியில் கலந்துகொண்டு திரும்பியுள்ளார்.

மற்ற கலைஞர்களின் படைப்புகள் குறித்து அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

சனி, 2 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon