மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 18 செப் 2020

இளைய நிலா: நாம் ஏன் தனித்து விடப்படுகிறோம்?

இளைய நிலா: நாம் ஏன் தனித்து விடப்படுகிறோம்?

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 10

ஆசிஃபா

கடந்த மூன்று மாதங்களுக்குள் ஐந்து நபர்களின் தற்கொலையைப் பார்த்துவிட்டேன். உடனிருந்து பழகிய நபர்களும் இதில் அடக்கம். வாழ்வில் இவர்கள் எதிர்காலத்தில் பெரும் நம்பிக்கையாக விளங்குவார்கள் என்றும், நாம் விரும்பும் உலகை உருவாக்குவார்கள் என்றும் நினைத்த நபர்கள்தான் இவர்கள். கல்லூரியில் பெரும் நம்பிக்கையாக விளங்கிய பேராசிரியரும் இதில் அடக்கம்.

நம்மைச் சுற்றி நண்பர்கள் இருக்கிறார்கள், நமக்கு ஒன்றும் ஆக விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருந்துகொண்டே இருக்கிறது. இல்லையா? ஆனால், ஒரு கட்டத்தில், குறிப்பிட்ட ஒரு நிகழ்வில் அவர்களை விட்டு நமக்கே தெரியாமல் நாம் விலகத் தொடங்குகிறோம். பெரும்பாலும், கல்லூரிக் காலத்தில் பலரும் இதைக் கடக்கிறார்கள். மிகவும் நெருங்கிய உறவாக இருக்கும் நட்புகூட, தூரமாகத் தெரியத் தொடங்குகிறது.

நான் கல்லூரியில் சேர்ந்த முதல் ஒன்றரை ஆண்டுகள் இதில் உழன்றேன் என்று சொல்லலாம். உலகிற்கும் எனக்குமான தூரம் அதிகரித்ததாகத் தோன்றியது. அதிலிருந்து என்னை மீட்பதற்கு நான் யாரையும் அனுமதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். யாரிடமும் பேசவில்லை. நான் அப்படியான ஒரு crisisஇல் இருப்பதுகூட யாருக்கும் தெரியாது. பிறகு எப்படியோ அது கடந்து போனது.

கல்லூரி இரண்டாம் ஆண்டில் என் நண்பன் ஒருவன் திடீரென்று அழைத்து, ‘எனக்கு வாழவே பிடிக்கல. எல்லாமே முடிஞ்சு போன மாதிரி இருக்கு’ என்று புலம்பினான். அதன் பிறகுதான் தெரிந்தது நாம் மட்டும் தனியாக இல்லை, பலரும் இப்பிரச்சனையைச் சந்திக்கிறார்கள் என்று. நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கும் பெற்றோர், நண்பர்கள், பிற உறவுகள், காதல் ஆகியவற்றுக்கு மத்தியில் நாம் ஏன் தனித்து விடப்படுகிறோம் என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழில்நுட்பம் நம்மை அதிக அளவில் இணைத்திருக்கிறது. எப்போதும் யாருடனாவது தொடர்பில் இருந்துகொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு நொடியும் தொடர்பில் இருக்கிறோம். ஆனால், மறுபுறம் தனித்து இருப்பதாக உணர்கிறோம். எவ்வளவு பெரிய முரண்!

முன்னெப்போதையும்விட 18-34 வயதுக்குட்பட்டவர்கள் அதிகளவில் தனிமையுணர்வில் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. உலகிலேயே இருக்கக் கூடிய மிகப் பெரிய வேடிக்கை இதுவாகத்தான் இருக்க முடியும். தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம், எனினும் தனிமையாக உணர்கிறோம்!

இதை எப்படி சமாளிப்பது? ‘மருத்துவர்களிடம் செல்’ என்பதுதான் எனக்குக் கிடைத்த ஆகப் பெரும் ஆலோசனை. ஆனால், மருத்துவரிடம் செல்வதால் மட்டும் இது தீர்ந்து போகப்போவது இல்லை. மன அழுத்தம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் நாம் வாழப் பழகி விடுகிறோம். ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், அந்த ‘வாழப் பழகுதலுக்கு’ சிறிது காலமாகும். அதுவரை என்ன செய்வது என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும்.

பல பெற்றோருக்கு, மன அழுத்தம் பற்றியோ பிற மனப் பிரச்சனைகள் பற்றிய புரிதல் இல்லை. வெகு சிலர் புரிந்துகொள்கின்றனர். ஆனால், பெரும்பான்மையானவர்களிடம் சென்று ‘மன அழுத்தம்’, ‘உளவியல் சிக்கல்’ என்றெல்லாம் பேசினால் பயந்து போவார்கள். அது நமக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, நாம் யாரிடம் பேசப் போகிறோம் என்பதை.

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு இரண்டு விஷயங்கள் மிகவும் அடிப்படை என்று நினைக்கிறேன். முதல் விஷயம், நாம் பேசுவது என்னவென்று புரிந்துகொள்ளக் கூடிய ஆட்கள். அவர்கள் நம் நெருங்கிய நண்பர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிந்த யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இரண்டாவது விஷயம், ஒருவித நம்பிக்கை. ஒருமுறை தோழர் மரகதமணி சொன்னார், “எதுவுமே சரியில்லாமல், பிடிக்காததுடன் வாழ் என்று வாழ்க்கை என்றைக்குமாக நம்மை சபித்துவிடாது. நமக்கென்று ஒரு விடியல் இருந்தே தீரும்”, என்று. இதுதான் அடிப்படை என்று சொல்லலாம். நம் வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தாலே போதும், மீண்டு வர முடியும்.

நமக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அவர்களுடன் பேசும்போது நிம்மதி கிடைப்பதை உணரலாம். முகம் பார்த்துப் பேசுவது மிகச் சிறந்த விஷயம். நாம் மறைக்க நினைக்கும் விஷயத்தையும் நம் முகம் காட்டும். மொபைல் அவ்வேலையைச் செய்யாது.

ஒவ்வொருவரும் வாழும் வாழ்க்கை வெவ்வேறானது. முடிந்தவரையில், நாம் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கப் பார்க்க வேண்டும்.

இனிவரும் காலங்களில், நமக்கான மனிதர்களின் தேவை அதிகமாக இருக்கப் போகிறது. எனவே, நாம் மனிதர்களைத் தேடிச் செல்வோம். நேரடியாக அவர்களிடம் உரையாடுவோம், உறவாடுவோம்.

அது என்ன தெய்வீகக் காதல்?

வியாழன், 31 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon