மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

கூட்டணி: பாஜகவை மீண்டும் தாக்கும் தம்பிதுரை

கூட்டணி: பாஜகவை மீண்டும் தாக்கும் தம்பிதுரை

“தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் கூட்டணி என முதல்வர் கூறியிருக்கிறார். பாஜக தமிழகத்துக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறதா?” என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்ற கேள்வி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் கேட்கப்படுகிறதோ இல்லையோ, ஒவ்வொரு பிரஸ் மீட்டிலும் தம்பிதுரையிடம் தவறாமல் கேட்கப்படுகிறது. இதற்குப் பதிலளிக்கும் தம்பிதுரையோ, பாஜகவைக் கடுமையாக விமர்சித்து, அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இல்லை என்று தெரிவித்து வருகிறார். இதற்கு பாஜக தரப்பிலிருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 27ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடியை, மக்களவைத் துணை சபாநாயகர் என்ற முறையில் தம்பிதுரையும் வரவேற்றிருந்தார். ஆனால், மேடையில் பேச அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, பாஜகவை மீண்டும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார் தம்பிதுரை. கரூரில் நேற்று (ஜனவரி 29) செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பாஜக - அதிமுக கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீட்டு குழு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த தம்பிதுரை, “நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோமா? எனவே இந்தக் கேள்வி எழுவதில் நியாயமில்லை. எந்தெந்த தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு உள்ளது, வேறு ஏதாவது கட்சிகளை கூட்டணியில் இணைக்கலாமா என்பதை ஆராயவே தொகுதிப் பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்தக் குழு அமைக்கப்படவில்லை. 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜெயலலிதா தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவில்லை. இது ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசு. எனவே அவரின் கொள்கைகளிலிருந்து மாறுபட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவேதான் தேவைப்பட்டால் கூட்டணி குறித்து யோசிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெளிவாகக் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

மேலும், பாஜக எங்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகச் சொல்லியுள்ளதா? இல்லை நாங்கள்தான் கூறியுள்ளோமா? ஜெயலலிதா இறந்த பிறகு கூட்டணியாக எங்களை பாஜக கருதவில்லையே. இந்த இரண்டு ஆண்டுகளில் எங்களிடம் சில உதவியைத்தான் நாடியிருக்கிறார்களே தவிர, கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்லியுள்ளார்களா என்று கேள்வி எழுப்பிய தம்பிதுரை, “மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நட்பு உள்ளது. ஆனால் நட்பின் அடிப்படையில் வைக்கும் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. நீட், நிலுவைத் தொகை, கஜா நிவாரண நிதி என மத்திய பாஜக அரசு தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் கூட்டணி என்று முதல்வர் தெரிவித்துள்ளார். பாஜக இதுவரை தமிழகத்துக்கு நன்மை செய்யவில்லை. நன்மை செய்த பிறகு, தலைமைக் கழகம் அது குறித்து முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon