மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

ஜாக்டோ ஜியோ போராட்டம்: ஒன்று சேரும் ஊழியர்கள்!

ஜாக்டோ ஜியோ போராட்டம்: ஒன்று சேரும் ஊழியர்கள்!

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திவரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக ஆட்சிக்கு எதிராக அரசு ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெறுவது உட்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். கடந்த ஆறு நாட்களாக நடந்துவரும் போராட்டத்துக்குத் தீர்வு காணாமல், பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், காவல் துறையினரை ஏவி அடக்குமுறையைக் காட்டுகிறது தமிழக அரசு என்று போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மத்தியில் கொந்தளிப்பு எழுந்துள்ளது. இதனைப் பிரதிபலிக்கும் விதமாக, மின்னம்பலத்துக்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் பேட்டி அளித்திருந்தார். அரசு ஊழியர்களின் மாதம் சம்பளத்திலிருந்து 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் பணம் 21,181 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என்று அப்பேட்டியில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், 7வது நாளாக இன்று ஜாக்டோ ஜியோ போராட்டம் மாவட்டத் தலைநகரங்களில் இன்று நடத்தப்பட்டு வருகிறது. இன்று (ஜனவரி 28) முதல் சென்னைத் தலைமைச் செயலகம் ஊழியர்கள் சங்கம் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று அளிக்கப்படும் தீர்ப்புக்குப் பிறகு, நாளை முதல் தமிழக நீதிமன்ற ஊழியர்கள் சங்கமும் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாகக் கைகோர்க்க உள்ளது என்று தெரிவித்துள்ளார் நீதிமன்ற ஊழியர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் குணாளன்.

கிராம நிர்வாக அலுவலர்கள், சாலைப் பணியாளர்கள், அரசுக் கருவூல ஊழியர்கள், மருத்துவத் துறையினர் உட்பட 56 துறையைச் சார்ந்த சங்கங்களும் போராட்டக் களத்தில் ஒன்று சேரவுள்ளது. அதையும் தாண்டி தமிழகக் காவல் துறையில் உள்ள காவலர்களும் போராட்டத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதாக, tnpolice war என்ற வாட்ஸ்அப் குருப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களைக் கைது செய்யச் சொல்லி காவல் துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதால், பெரும்பாலான காவல் துறை அதிகாரிகளும் அரசு மீது அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் போராட்டக் களத்தில் உள்ள காவல் துறை அமைச்சுப் பணியாளர்கள்.

பலமாவட்டங்களில் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆசிரியர் - அரசு ஊழியர் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளதாகச் சொல்கிறார் நாகை மாவட்ட ஆசிரியர். “அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் வைக்க முடியுமா அல்லது அனைத்து அரசு ஊழியர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமா”” என்று கேள்வியெழுப்புகிறார் பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் சுரேஷ்.

அடக்குமுறையால் தீர்வு காண முடியாது. அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாகத் தீர்வு காண்பது ஆட்சியாளர்களுக்கு அழகு என்கின்றனர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். போராட்டம் தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் முடிவடையவுள்ளதால், தமிழக அரசின் சார்பில் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

திங்கள், 28 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon