மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

ஜாக்டோ ஜியோ: இன்றும் தொடரும் கைது நடவடிக்கை?

ஜாக்டோ ஜியோ: இன்றும் தொடரும் கைது நடவடிக்கை?

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைத் தமிழகம் முழுவதும் கைது செய்வதற்குக் காவல் துறை தலைமையிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதால் கடுமையான பணிச்சுமையில் இருந்துவரும் போலீசார் மற்றும் அதிகாரிகள் குமுறலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்று (ஜனவரி 27) ஆறாவது நாளாக ஜாக்டோ ஜியோவினரின் போராட்டம் தமிழகம் முழுவதும் தொடர்கிறது. “பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்யச் சொல்லியும், காலியிடங்கள் நிரப்பி வேலைவாய்ப்பு கொடுங்கள் என்று கூறியும், கடந்த 22ஆம் தேதி முதல் போராடி வருகிறோம். நாங்கள் ஊதிய உயர்வு கேட்கவில்லை. ஆனால், எங்களுக்குக் காவல் துறையினரும் கல்வித் துறையினரும் கடுமையான நெருக்கடிகள் அளிக்கின்றனர்” என்று கூறி வருகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள். நாளை (ஜனவரி 28) தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது குறித்து, நேற்று மாலை 7 மணி பதிப்பில் ஜாக்டோ ஜியோ: அரசின் கவனத்தை ஈர்க்கப் புது திட்டம் என்ற செய்தி வெளியிட்டிருந்தோம்.

நேற்று முன்தினம் (ஜனவரி 25) மறியல் செய்து கைதானவர்களைப் பகல் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருந்தனர். இரவில் அவர்களை விடுவிக்கும்போது, முக்கிய நிர்வாகிகள் சிலரைக் கைது செய்து ஜுடிஷியல் மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் சென்றனர் போலீசார். அவர்களை ரிமாண்ட் செய்யுமாறு கூறினர். “எங்கள் உரிமையைக் கேட்டுப் போராடுகிறோம். நீதிமன்றம் எங்கள் போராட்டத்துக்குத் தடை விதிக்கவில்லை. பணிக்குத்தான் திரும்பச் சொல்லிருக்கிறது. ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கு வரும் 28ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எங்கள் மீது அபாண்டமாகப் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது” என்று மாஜிஸ்திரேட்டிடம் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சில மாவட்டங்களில் மாஜிஸ்திரேட்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, கைதானவர்களை அவர்களது சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜனவரி 27) அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் ஒரு மாவட்டத்துக்கு 100 முதல் 150 பேர் வரையில் கைது செய்து சிறைக்கு அனுப்ப போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். மாஜிஸ்திரேட்கள் சில இடங்களில் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகரத் துணை ஆணையர்கள் நேரடியாக மாவட்ட நீதிபதிகளைச் சந்தித்து ரிமான்ட் கொடுக்க உதவுமாறு கேளுங்கள் என்று காவல் துறை தலைமை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார். குறிப்பாக, ஆசிரியர்கள் அதிகளவில் இருக்க வேண்டுமென்று அழுத்தம் தரப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

“நேற்று (ஜனவரி 26) தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகளைச் சந்தித்துப் பேசினர் காவல் துறை அதிகாரிகள். கடந்த 22ஆம் தேதி முதல் போலீசார் ஓய்வே இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர் என்றும், குடியரசு தின விழாவை முன்னிட்டு இரவும் பகலுமாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்றும், ஞாயிற்றுக்கிழமையாவது கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம் என்று பார்த்தால் மீண்டும் கைது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட நீதிபதிகளிடம் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்கள் நிலையைச் சொல்லி ரிமாண்ட் கொடுக்கச் சொல்லிக் கேட்டுள்ளனர். காவல் துறை அதிகாரிகளின் குமுறலைக் கேட்ட நீதியரசர்கள் வேதனையோடு தலையசைத்துள்ளனர். அதனால், இன்று முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்படவுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 3,500 பேரைக் கைது செய்ய போலீசார் புறப்பட்டுவிட்டனர்” என்று கூறினார் அந்த அதிகாரி.

அதேநேரத்தில், தமிழகப் பள்ளிக்கல்வித் துறையினரும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஒரு மாவட்டத்துக்குச் சுமார் 20 ஆசிரியர்கள் வீதம் சஸ்பெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் 20 ஆசிரியர்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் ஓர் ஆசிரியை கூட இல்லை என்பது கூடுதல் தகவல்.

அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் தொடரவிடுவதும், நியாயம் கேட்டுப் போராடுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும், கொடநாடு செய்தியில் இருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவா என்ற கேள்வியும் தற்போது பலமாக எழுப்பப்படுகிறது.

ஞாயிறு, 27 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon