மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

கதையைச் சுடுகிறவர்கள் கவனத்துக்கு! - கேபிள் சங்கர்

கதையைச் சுடுகிறவர்கள் கவனத்துக்கு! - கேபிள் சங்கர்

2018ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள்! பகுதி - 4

கள்ளச் சிரிப்பு

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜீ5 தயாரிப்பில் வெளியான தமிழ் வெப் சீரீஸ். ஒரு வருஷம்தான் என்கிற அக்ரிமெண்டோடு வீட்டில் பார்த்த பையனைத் திருமணம் செய்துகொள்ளும் பெண். ஆக்ஸிடெண்டலாய் தன் கணவனை கொலை செய்துவிடுகிறாள். அதன் பின்னால் நடக்கும் கதைதான் இந்த சீரீஸ்.

இப்படி நேரிடையாய்ச் சொன்னால் பெரிய சுவாரஸ்யம் ஏதுமில்லை. எனவே அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவர்களிடையே திருமணத்திற்குப் பிறகும் உறவு இருக்கிறது. அப்பாவுக்கும் மகளுக்கும் புரிந்துணர்வு கிடையாது. அம்மாவிடம் பெண் தேவையேயில்லாமல் மாஸ்டர்பேஷன் பற்றி சைகையோடு பேசுவாள். கொலை செய்து விட்டு, ரொம்பவே பழக்கமானவள்போல நடந்துகொள்வாள். அவ்வப்போது பொருந்தாத இடங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சில கெட்ட வார்த்தைகளை அப்பனிடமே சொல்வாள்.

இது போன்ற பற்பல சுவாரஸ்யங்கள் வைத்திருப்பதாய் நினைத்திருந்தாலும், படத்தில் ஆதாரமான சரக்கு அத்தனை வலுவாக இல்லை. அந்தப் பெண்ணின் காதலனாய் நடித்தவரின் நடிப்பும். நான் லீனியரில் சொல்லப்பட்ட திரைக்கதையையும் தவிர சொல்லிக்கொள்கிறாற்போல ஒன்றுமில்லை.

அமெரிக்க மாப்பிள்ளை

பெயரைப் பார்த்ததும் சபா டைப் நாடகத்தின் மறுவடிவமாக இருக்குமோ என்று யோசித்தபடிதான் பார்க்க ஆரம்பித்தேன். மணிரத்னத்தனமான வசனங்கள், கொஞ்சம் ரசனையான விஷுவல் என ஆரம்பித்ததும் ஓக்கே.. என்று தொடர்ந்த சீரீஸ்.

அமெரிக்காவிலிருந்து வரும் இளைஞனுக்குப் பெண் பார்க்க விரும்புகிறார்கள். அவனுக்கு அதில் விருப்பமில்லை. திருமணத்தைத் தவிர்க்க எதையாவது சொல்ல வேண்டும். தான் ஒரு “கே” என்று சொல்கிறான். அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு யார் அந்தப் பையன் என்று கேட்க, அவன் தன் நண்பனைச் சொல்லிவிடுகிறான். அதன் பின் என்ன ஆகிறது, ஏன் அவன் தன்னை கே என்று சொன்னான் என சில பல சுலபமான டிவிஸ்டுகளோடு அலசுகிறார்கள்.

இந்தி, ஆங்கிலத்தைப் பொறுத்தவரை கே பிரச்சினைகளை அவர்கள் பிரச்சினையாகவே பார்ப்பதில்லை. அதைத் தாண்டி வந்துவிட்டார்கள். இங்கே அது இன்னும் தொடப்படாத, முகம் சுளிக்கும் விஷயமாகவே இருக்கிறது. இக்கதையிலும் உயர் ஜாதிக் குடும்பம். அவர்கள் ஏற்றுக்கொள்வது போன்ற காட்சிகள்தான் என்றாலும் அதை எப்படி அணுக வேண்டும். எப்படி இந்த பிரச்சினையை டீல் செய்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாய் அதே நேரத்தில் வாத்தியார்த்தனமாய் இல்லாமல் சொன்னது பாராட்டுக்குறியது.

Mana Mugguru Love Story

சென்ற வருட பிக் பாஸ் ஹிட்டுக்குப் பிறகு நவ்தீப் பிரபலமானவராய் வலம் வந்த நேரத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த யப் டிவி ஆப்பின் தெலுங்கு வெப் சீரீஸ். வழக்கம் போல முக்கோணக் காதல் கதைதான். பணக்கார முதலாளி. அழகிய, குழப்பமான பெண். துறு துறு மிடில் க்ளாஸ் இளைஞன் என டெம்ப்ளேட் காதல் கதை கேரக்டர்கள்தான். ஆனால், அதை முன்வைத்த செய்த விதத்தில்தான் இந்த வெப் சீரீஸ் சுவாரஸ்யத்தைத் தந்தது.

காதல் கதைகளில் என்னத்த பெருசா என்கிறவர்களுக்கு தெலுங்கு மக்களின் சினிமா ரசனையை கருத்தில் கொண்டு அதிலிருந்து மெல்ல வெளியே கொண்டுவர மிகவும் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சிலர் செய்கிற இம்மாதிரி முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை. கொஞ்சம் ஆர்.பி. சவுத்ரி காலத்துக் கதைக்களன்தான் என்றாலும் அழகிய நாயகிகள் தோன்றும் காதல் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யம். அதிலும் வசீகரமான விஷுவல்களோடு வரும்போது இன்னும் மனதுக்கு நெருக்கமாகிறது. நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் என்கிற வகை சீரிஸ்

நம்மூர் பெண்கள் எங்கே?

பல சீரிஸ்களில் இருக்கும் பிரச்சினை வெளிநாட்டு சீரிஸ்களில் வரும் பெண் கேரக்டர்களை அடிப்படையாகக் கொண்டு கேரக்டர்களை வடிவமைப்பது. அங்கே அவர்களது வாழ்வியல் வேறு. நிறைய விஷயங்களுக்குக் காரணம் சொல்லத் தேவையில்லை. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை குடும்பம் சார்ந்த அமைப்புதான் பெரும்பாலும். எனவே ஒவ்வொரு கேரக்டர் செய்யும் செயல்கள் எந்த விதத்தில் நியாயம் அல்லது தவறு என்பதற்கான விளக்கம் தேவை.

உதாரணமாய் இந்திய அளவில் எடுக்கப்படும் சீரியல் கில்லர் கதைகளில் ஏன் அவன் சீரியல் கில்லர் ஆனான் என்பதற்கு நியாயமான விளக்கம் சொல்லாத படங்கள் என்னதான் டெக்னிக்கலாய் அசத்தியிருந்தாலும் மக்களால் கொண்டாடப்பட்டதேயில்லை. காரணம் நம் நாட்டின் குடும்ப அமைப்பு. என்னதான் நாலு பிள்ளைகளில் ஒரு பிள்ளை தத்தாரியாய் போய்விட்டான் என்றாலும் ஏதோ ஒரு வகையில் கரித்துக் கொட்டிக்கொண்டாவது அவனை ஆதரித்துக்கொண்டிருக்கும் குடும்ப அமைப்பு. அவன் சீரியல் கில்லர் ஆக ஒரு லாஜிக்கல் காரணம் தேவை. அப்படியில்லை என்றால் அது இந்திய அளவில் படங்களில் மட்டுமல்ல. சீரீஸ்களுக்கும் ஒத்து வராது.

கதை கிடைக்காமல் வெளிநாட்டுப் படங்களிலிருந்தும் சுடுகிறவர்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

முந்தைய பகுதி : சன்னி லியோனின் சொல்லப்படாத கதை!

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon