மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

ஜாக்டோ ஜியோ: நிர்வாகிகளைச் சிறைக்கு அனுப்பத் திட்டம்?

ஜாக்டோ ஜியோ: நிர்வாகிகளைச் சிறைக்கு அனுப்பத் திட்டம்?

போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளைக் கண்டறிந்து, அவர்களைக் கைது செய்து, சிறையிலடைக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஓய்வு ஊதியத் திட்டம், ஊதிய முரண்பாடுகள், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், தொகுப்பு ஊதியப் பணியாளர்களை நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தற்காலிக ஆசிரியர்கள்

இந்நிலையில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை ஆணைப் பிறப்பித்துள்ளது. தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு ரூ.7,500 ஊதியம் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், பணிக்கு வராதது குறித்து விளக்கமளிக்க 17பி பிரிவின் கீழ் பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் மூலம், ஊதியம் பிடித்தம் அல்லது பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

“போராட்டத்தின் வடிவங்கள் 28ஆம் தேதிக்குப் பிறகு தீவிரப்படுத்தப்படும். மாவட்ட அளவில் இன்று (ஜனவரி 25) மறியல் போராட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். 28ஆம் தேதி இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும். ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை” என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, பொதுத் தேர்வு நெருங்கும் நேரத்தில் சொற்ப அளவிலான பள்ளிகளே திறந்திருந்தாலும் அங்கும் ஆசிரியர்கள் இல்லாமலும், மாணவர்கள் இல்லாமலுமே காட்சியளிக்கிறது.

முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்யத் திட்டம்

போராட்டத்தில் முன்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்ற தலைப்பில் நேற்று மாலை 7 மணி பதிப்பில் நாம் வெளியிட்டிருந்த செய்தியில், ஜாக்டோ ஜியோவில் உள்ள சங்கங்கள் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்து உள்ளன. போராட்டக்காரர்களுக்குப் பின்னால் அந்தக் கட்சிகள் இருக்கிறது என்றும், அதில் முக்கியமான நிர்வாகிகளைக் கண்டறிந்து சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் செய்ய மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தோம்.

திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்துள்ள அரசு ஊழியர் சங்கங்களை நசுக்கும் வகையில் அதன் முக்கிய நிர்வாகிகளைக் கண்டறிந்து சஸ்பெண்ட் செய்தும், வழக்கு போட்டு சிறையில் தள்ளியும் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய அனைத்து மாவட்ட உளவுத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு போயிருக்கிறது. போராட்டத்தில் தீவிரமாக இருந்துவரும் முக்கிய நிர்வாகிகள், குறிப்பாக அவர்கள் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்து இருந்தால் ஒரு வட்டாரத்துக்கு 20 பேர் கொண்ட பட்டியலைக் கொடுங்கள் என்று டிஜிபி அலுவலகத்திலிருந்து கேட்டார்களாம்.

அதன்படி களமிறங்கிய மாவட்ட உளவுத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் வட்டாரத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் செய்தவர்களில் முக்கியப் பொறுப்பாளர்களின் பெயர், பணி, பதவி, வசிக்குமிடம், பணி செய்யுமிடம், சார்ந்துள்ள சங்கம், அதன் பின்னணியில் உள்ள கட்சி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எடுத்து நேற்று இரவே மெயில் அனுப்பியுள்ளார்கள்.

தமிழகம் முழுவதும் 292 வட்டாரங்களில் மாநில, மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் என்று சுமார் 5,800 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறதாம் அரசு. முக்கிய பொறுப்பாளர்கள் 160 பேரை சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் செய்யவும், கைது செய்யவும் திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

வெள்ளி 25 ஜன 2019