மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 ஜன 2019

புத்தகக் காட்சி 2019: “மனிதனை மனிதனாக்குவது வாசிப்புதான்!”

புத்தகக் காட்சி 2019: “மனிதனை மனிதனாக்குவது வாசிப்புதான்!”

சாரு நிவேதிதா நேர்காணல்!

சந்திப்பு : பியர்சன் லினேக்கர். ச.ரே

சென்னைப் புத்தகக் காட்சியில், தன் வாசகர்களுடன் புன்சிரிப்போடு உரையாடிக் கொண்டிருந்த எழுத்தாளர் சாரு நிவேதிதாவிடம் ஒரு பேட்டி

எழுத்தாளராக உங்களுடைய செயல்பாடுகள் எப்படிப்பட்டது?

பறவை பறப்பது மாதிரி, மரம் வளர்வது மாதிரி, செடி வளர்வது மாதிரிதான் நான் எழுதுவேன். மரம் ஆக்ஸிஜன் கொடுக்கிறது, காற்றைக் கொடுக்கிறது. இதையெல்லாம் கொடுப்பதற்காகவே அவை வளர்வதில்லை. பறவைகள் இல்லையென்றால் இந்த உலகம் இருக்காது தெரியுமா? அதனுடைய எச்சத்தில்தான் விதைகள் மண்ணில் விதைக்கப்படுகின்றன. அது எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு மரங்கள் வளர்கின்றன. மரங்கள் காடுகளாகி இந்த உலகம் செழிப்படையக் காரணமாயிருக்கிறது. பறவைகள்தான் இந்த உலகம் நிலைப்பதற்கு முக்கியக் காரணம். ஆனால், இந்த உலகம் நிலைக்க வேண்டும் என்பதற்காக அவை அப்படிச் செய்வதில்லை. அதே போன்றுதான் எழுத்தாளனாகிய நானும் செயல்படுகிறேன்.

வாசகர்களுக்கும் உங்களுக்குமான உறவு எத்தகையது?

சமீபத்தில் பாலா என்ற ஒரு வாசகர் என்னைக் காண பத்து வருடங்கள் காத்திருப்பதாகச் சொன்னார். நான் எழுதிய அனைத்தையும் ஞாபகம் வைத்திருக்கிறார். ஒரு கதையில் கதாநாயகனின் மனைவி நுதன் ஸ்டவ்வில் திரியை நுழைக்க முடியாதபோது அதை மறுபடியும் மறுபடியும் நுழைக்க முற்படும்போது அவள் கை எப்படி கொப்பளித்து போகிறது என்று நான் 35 வருடங்கள் முன்பு எழுதியதை எனக்கே நினைவுபடுத்தினார். தன் தங்கை தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்ட துயரத்திலிருந்து மீள என் எழுத்துகள் பெரிதும் உறுதுணையாக இருந்தன என்றார். அதேபோல 85 வயது மாமி ஒருவர் வந்து “அந்த செனாய் வாசிப்பாரே... அவரு யாரு? ம்ம்ம் பிஸ்மில்லா கான். அவரு செனாய் வாசிக்கும்போது காசி விஸ்வநாதர் உருவம் வந்து நிக்கிறதை ரொம்ப அழகா விவரிச்சி எழுதியிருப்பீங்களே... அது எந்த புஸ்தகம்” என்று வந்து கேட்டார். இப்படி நிறைய வாசகர்கள் வந்து பேசுவது எனக்கு இன்பம். தினமும் நூற்றுக்கணக்கான வாசகர்களைச் சந்திக்கிறேன். அவர்களுடன் உரையாடுகிறேன். இது எனக்கு இன்பமான ஒன்றுதான்.

முழு நேர எழுத்தாளர் ஆவதற்கான ஒரு சூழல் இங்கு இருக்கிறதா?

கல்வித் துறை, ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என இவர்கள்தான் மாணவர்களுக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்ய வேண்டும். ஆனால், இவர்களுக்கு இலக்கியமும் தெரியாது; இலக்கியவாதிகளையும் தெரியாது. கண்ணிருந்தும் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள். அடிப்படைக் கல்வியிலிருந்தே இலக்கியம் கற்றுத் தரப்பட வேண்டும். அப்போதுதான் எழுத்தாளன் உருவாக முடியும். ஒரு சிலருக்கு முகநூலின் மூலமாக 30 வயதில்தான் இலக்கியம் அறிமுகமாகிறது. எட்டு கோடிப் பேர் இருக்கும் தமிழ்நாட்டில் குறைந்தது ஒரு புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளாவது விற்க வேண்டும். ஆனால் வெறும் 500 பிரதிகள் மட்டுமே விற்பனையாகின்றன. எழுத்தாளனாகவோ, விமர்சகனாகவோ ஆக விரும்புகிறவர்கள் கிளார்க்காகவோ அல்லது சினிமாவில் கதை எழுதுபவனாகவோ பிறருக்குக் கும்பிடு போட்டு வாழ வேண்டியுள்ளது.

எல்லாம் நம்முடைய தேர்வுதான். சிறு வயதில் வசதியானவனாக இருந்திருந்தால் நான் ஓர் இசைக் கலைஞராக வந்திருப்பேன். நல்லவேளை எழுத்தாளனாகிவிட்டேன். எழுத்துக் கலையை ரொம்ப சுலபமாகத் தாக்குப் பிடிக்க முடியும். மொழியோடு புழங்குவது என்னை மனிதனாக்குகிறது. அடிப்படையில் மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வித்தியாசம் எழுத்து என்று கூறலாம். மனிதனை மனிதனாக்குவது மொழி, எழுத்து, வாசிப்புதான். வாசிக்காதவன் மிருகத்துக்குச் சமம்.

இந்தப் புத்தகக் காட்சி குறித்து...

இலக்கிய அரங்குகளை அங்கும் இங்கும் வைத்திருப்பது வாங்க வருபவர்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதைச் சரி செய்ய வேண்டும். பபாசிக்கு அரசாங்கம் நிதியளித்து உதவினால் புத்தகக் காட்சி இன்னும் சிறப்பாக அமையும். அடிப்படை வசதிகளை மேப்படுத்த உதவியாக இருக்கும். முதல் நாள் எடப்பாடி பழனிசாமி வந்தது பெரும் உபத்திரவமாகிவிட்டது. அவர் இங்கு வர வேண்டிய அவசியமே இல்லை. புத்தகம் வாங்க வந்தவர்களை வாசலிலேயே போலீஸ் திருப்பி அனுப்பிவிட்டது. அவர் வருகை வாசகர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் கஷ்டத்தைத்தான் கொடுத்தது.

மனுஷ்ய புத்திரன் நேர்காணல்!

கண்ணன் நேர்காணல்!

அச்சிலும் அசத்தும் 'மின்னம்பலம்'!

ஞாயிறு, 20 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon